தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் கிழக்கு மாகாணம் வீழ்ச்சி

(படுவான் பாலகன்) இலங்கை நாட்டில் உள்ள அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுடையே நடாத்தப்படுகின்ற பரீட்சைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை போட்டிமிக்கதாகவும், எல்லோராலும் பேசப்படுவதும், சமூக அந்தஸ்மிக்கதாகவும், பெற்றோர்களுக்கான போட்டிப்பரீட்சை போன்றும் சமூகத்திலே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 


இலவசக்கல்வியின் தந்தையாக கூறப்படுகின்ற சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் 1940ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரீட்சை பல கிராமங்களிலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாகும் அமையப்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் உதவிப் பணம் வழங்குவதற்காக மாவட்ட அடிப்படையில் வரையறுக்கப்பட்ட, குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இப்பரீட்சை நடாத்தப்படுகின்றது. மேலும் சிறந்த வசதிகளை கொண்டிருக்கின்ற தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கும் இப்பரீட்சையின் புள்ளிகள் தற்காலத்தில் முக்கியபெறுவதாகவும் அமைந்துள்ளது. 

இரண்டு வினாப்பத்திரங்களை கொண்டு நடாத்தப்படும் இப்பரீட்சையில் ஒரு வினாப்பத்திரத்தில் குறைந்ததது 35புள்ளிகள் பெற்று இரு வினாப்பத்திரங்களிலும் மொத்தமாக 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு அடைவு சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வாறான நோக்கங்களை கொண்டு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் இப்பரீட்சை மாணவர்களைவிட பெற்றோர்களின் மத்தியிலே இதன் செல்வாக்கு வலுப்பெற்றிருக்கின்றது. பெற்றோர்களின் சமூக அந்தஸ்துக்காகவும், பெற்றோர்களிடையே காணப்படுகின்ற போட்டித்தன்மை காரணமாகவும் மாணவர்களை இப்பரீட்சைக்கு தயார்படுத்துதலில் அதிக அக்கரை செலுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் கசக்கிபிழியப்படுகின்றனர். காலையில் எழுந்து 04மணி தொடக்கம் அன்றிரவு 09 அல்லது 10மணி வரையும் மாணவர்களுக்கு கற்பித்தல்கள் பாடசாலை, பிரத்தியேக கல்வி நிலையங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மாணவர்கள் கல்வி எனும் சிறையில் பெற்றோர்களால் அடைக்கப்பட்டவர்கள் போன்று இரண்டு வருடங்கள் அகப்பட்டுக்கொள்கின்றனர். விளையாடுவதற்கு, சக உறவினர்களுடன் கதைத்துபேசி மகிழ்வதற்கு, விரும்பிய இடங்களுக்கு சென்று வருவதற்கு, விரும்பியதை செய்வதற்கு அனுமதியற்றவர்களாக வகுப்பு வகுப்பு, படிப்பு, படிப்பு என்று அதனுள்ளே சிக்கி தமது சுயவிருப்பு வெறுப்பை அடைய முடியாதவர்களாக பெற்றோர்களின் திணிப்பு, போட்டி மாணவர்களின் மனதினை நொருக்குகின்றது. 

பெற்றோர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் செலுத்தும் ஆர்வம் ஏனைய பரீட்சைகளில் செலுத்தாததினால் எத்தனையோ மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சைகளில் தவறவிடப்படுகின்றனர். மாணவர்களின் மீது புலமைப்பரிசில் பரீட்சைக்காக பெற்றோர் காட்டுகின்ற அக்கரை அனைத்து பரீட்சைகளிலும் காட்டுகின்ற போது ஒவ்வொரு மாணவனிதும் எதிர்கால ஒளிமயமானதாக அமையப்பெறும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெற்றோர்களின் போட்டிப்பரீட்சையாக பெற்றோர்கள் மாற்றியுள்ளமையால் கல்வியை வழங்கும் பிரத்தியேக கல்வி நிலையங்கள் பல சிறந்த விதையில்லாதவைகளாக இருந்தாலும் முளையெழும்பி விருட்சமாக காட்சி கொடுத்ததை கண்டு அவற்றிலே விருப்புக்கொண்டு பின் அவை பலன்கொடுக்காததை கண்டு ஏமாற்றமடைவதும், இவற்றிற்காக முதலீடு செய்யப்படுகின்ற பணங்களும் வீண்விரயங்களாகவே மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதுடன், வெறும் பலனற்ற விற்பனை பொருளாகவுமே மாறியிருக்கின்றது. இதனால் இதனை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம், தோல்வி அடைவது போன்று மாணவர்களும் ஏமாற்றமும் தோல்வியும் அடைகின்ற சூழலிலே இருந்து கொண்டிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் கிழக்கு  மாகாணத்தில் கல்வி நிலை எவ்வாறு இருந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி நோக்குகின்றபோது. 

தரம் 5 புலமைப்பரிசில் மாகாண தரப்படுத்தலில் வெட்டுப்புள்ளிகளை தாண்டிய மாணவர்களின் அடிப்படையில் 2011ம் ஆண்டு கிழக்கு மாகாணம் 5ம் இடத்தினை பெற்ற மாகாணமாகவும், 2012ம் ஆண்டு ஏழாவது இடத்தினை பெற்ற மாகாணமாகவும் 2013ம் ஆண்டு 8ம் இடத்தினை பெற்ற மாகாணமாகவும், 2014ம் ஆண்டு 8ம் இடத்தினை பெற்ற மாகாணமாகவும், 2015ம் ஆண்டும் 8ம் இடத்தினை பெற்ற மாகாணமாகவும் இருக்கின்றது.  அவ்வகையில் பார்க்கின்ற போது 2011ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாவட்டவெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பின்னோக்கி சென்று இறுதி இடத்திற்கு முந்திய மாகாணமாக இருப்பதும் கிழக்கு மாகாணத்தின் கல்வியின் வீழ்ச்சியையே எடுத்துத்துக் காட்டுகின்றது.


2015ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு வினாத்தாளில் 50புள்ளி அல்லது அதற்கு மேல் இருவினாத்தாள்களிலும் 100புள்ளி அல்லது அதற்கு மேல்  பெற்றதன் அடிப்படையில்; கிழக்கு மாகாணம் 9வது இடத்தினை பெற்ற மாகாணமாக இருக்கின்றது. அதேபோன்று 70புள்ளிகளுக்கு மேல் பெற்றதன் அடிப்படையில் (இரு வினாக்களிலும் 35அல்லது அதற்கு மேல்) கிழக்கு மாகாணம் 9வது இடத்தினை பெற்ற மாகாணமாக உள்ளது. இவை கிழக்கு மாகாணத்தின் கல்வியின் நிலையை எடுத்துகாட்டுகின்றது. இதிலிருந்து தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை அடைவு சான்றிதழை பெறுவதில் கூட கிழக்கு மாகாணம் பின்தங்கிய நிலையிலே இருக்கின்றமையும் எடுத்துக்காட்டத்தக்கது.

கிழக்கு மகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதத்தினை அவதானிக்கின்றபோது 

2011ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் 10.85வீதத்தினையும், 2012ம் ஆண்டு 10.63வீதத்தினையும், 2013ம் ஆண்டு 9.73வீதத்தினையும், 2014ம் ஆண்டு 9.43வீதத்தினையும், 2015ம் ஆண்டு 8.25வீத்தினையும் பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் 2011ம் ஆண்டு 11.45வீதத்தினையும், 2012ம் ஆண்டு 11.93வீதத்தினையும், 2013ம் ஆண்டு 10.93வீதத்தினையும், 2014ம் ஆண்டு 9.04வீதத்தினையும், 2015ம் ஆண்டு 8.17வீதத்தினையும் பெற்றுள்ளது. 

திருகோணமலை மாவட்டம் 2011ம் ஆண்டு 7.75வீதததினையும் 2012ம் ஆண்டு 7.62வீதத்தினையும், 2013ம் ஆண்டு 7.50வீதத்தினையும், 2014ம் ஆண்டு 6.43வீதத்தினையும், 2015ம் ஆண்டு 7.32வீதத்தினையும் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்களின் வீதத்தில் ஒவ்வொரு வருடமும் குறைந்து செல்லுகின்ற நிலையில் திருகோணமலை மாவட்டம் 2011ம் ஆண்டிலிருந்து குறைவடைந்து 2015ம் ஆண்டு அதிகரித்திருக்கின்றமையை காணமுடிகின்றது. இதுவும் கிழக்கு மாகாணத்தின் தொடர்தேர்ச்சியான வீழ்ச்சிமட்டத்தினையே எடுத்துகாட்டுவதுடன் இவ்வாறான வீதத்தில் குறைவடைந்து செல்லுமாயின் மாகாணத்தின் கல்வி நிலை ஆபத்தானதாவே அமையும்.

இலங்கையில் உள்ள மாவட்டங்களின் தரப்படுத்தலில் 2015ம் ஆண்டு வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களின் சித்திவீதத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு 18வது மாவட்ட இடத்தினையும், அம்பாறை 19வது மாவட்ட இடத்தினையும், திருகோணமலை 22வது மாவட்ட இடத்தினையும். 70புள்ளிகளுக்கு மேல் பெற்றதன் அடிப்படையில் அம்பாறை 19வது இடத்தினையும், மட்டக்களப்பு 24வது இடத்தினையும், திருகோணமலை 25வது இடத்தினையும், 100புள்ளிகளுக்கு மேல் பெற்றதன் அடிப்படையில் அம்பாறை 19வது மாவட்டமாகவும், மட்டக்களப்பு 22வது மாவட்டமாகவும், திருகோணமலை 25வது மாவட்டமாகவும் உள்ளது.

மூன்று மாவட்டங்களிலும் திருகோணமலை மாவட்டமே மிகவும் பின்னுக்குள்ள மாவட்டமாகவும், இறுதி மாவட்டமாகவும் உள்ளமை கிழக்கின் கல்வியின் அபாயநிலையை காட்டுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களமொழிமூலமாக எவரும் தோற்றியிருக்கவில்லை தமிழ் மொழி மூலமாக 10658பேர் தோற்றியதில் 879 பேர் மாவட்ட வெட்டுப்புளிகளுக்கு மேல் பெற்றனர். 

அம்பாறை மாவட்டத்தில் சிங்களமொழிமூலமாக 4541பேர் தோற்றி 417பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றனர். தமிழ்மொழிமூலமாக 8410பேர் தோற்றி 641Nர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களமொழிமூலமாக 1857பேர் தோற்றி 127பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 5837பேர் தமிழ்மொழிமூலம் தோற்றி 436பேர் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

2015ம் ஆண்டு வலயங்களின் அடிப்படையில் திருகோணமலை வலயம் 12வது வலயமாக உள்ளது. மட்டக்களப்பு வலயம் 25வது வலயம், மட்டக்களப்பு மத்தி வலயம் 31வது இடம், அம்பாறை வலயம் 35வது இடம், அக்கரைப்பற்று வலயம் 45வது இடம், தெகியத்தகண்டிய வலயம் 49வது வலயமாக உள்ளது. திருக்கோவில் வலயம் 55வது வலயமாக உள்ளது. பட்டிருப்பு வலயம் 62வது வலயமாக உள்ளது. கல்முனை வலயம் 69வது வலயமாக உள்ளது. கந்தரளாய் வலயம் 71வது வலயம், சம்மாந்துறை வலயம் 81வது இடம், மகாஓயா வலயம் 86வது இடம், திருகோணமலை வடக்கு வலயம் 87வது வலயம், கல்குடா வலயம் 91வது இடம், மூதூர் 92வது வலயம், மட்டக்களப்பு மேற்கு 96வது வலயம், கிண்ணியா 97வது வலயமாக உள்ளது. வலயங்களின் அடிப்படையில் இத்தரவுகளினை மையமாக கொண்டு பார்க்கின்ற போது கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயங்கள் பெரும்பாலனாவை பின்னோக்கி இருக்கின்றமையையே எடுத்துகாட்டுகினறது திருகோணமலை வலயம், மட்டக்களப்பு வலயம் போன்றவை போன்று ஏனைய வலயங்களும் பெறுபேறுகளை பெறுமாகவிருந்தால் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை முன்னோக்கியதாக செல்லும் என்பதில் ஐயமில்லை.

பின்னோக்கிய வலயங்களாக இருக்கின்ற வலயங்களை பார்க்கின்றபோது இவ்வலயங்களில் ஆசிரியர் ஆளணி, பாடசாலை வளப்பற்றாக்குறை, பெற்றோரின் குடும்ப பொருளாதார நிலை போன்றவற்றிலும் பின்தங்கியதாகவே இருக்கின்றது. குறிப்பாக பிள்ளைகளின் இடைவிலகல், தரம் 5க்கு கற்பிப்பதற்கான தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை, ஆரம்பபிரிவில் முறையான கல்வி புகட்டப்படாமை, பல ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இல்லாமை போன்ற காரணங்களினால் பாடசாலையையே நம்பி இருக்கின்ற மாணவர்களின் கல்விமட்டம் குறைவாகவே இருக்கின்றது. தரம் 5ல் கல்வி கற்கின்ற பல மாணவர்கள் எழுத்துக்களை இனங்காண, வாசிக்க சொற்களை விளங்கிக்கொள்ள, வசனங்களை அமைக்க, வாக்கியங்களை புரிந்துகொள்ள, அடிப்படை கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்ற செய்கைமுறைகளை செய்ய முடியாதவர்களாக தரம் 5 ல் கற்கும் மாணவர்கள் இருக்கின்ற வலயங்களே பிரதான பரீட்சைகளிலும் பின்னோக்கியதாக இருக்கின்றது. பெரும்பாலன ஆசிரியர்கள் நகர்புற பாடசாலைகளிலும் கற்பிப்பதற்கும், பல அரசியல்வாதிகள் நகர்புறங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்குமே அதிக அக்கரை செலுத்துவர்களாகவும் இருக்கின்றமை ஏனைய கிராமப்புற, பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான பாதிப்புக்கள் கிழக்கு மாகாணத்தின் முற்றுமுழுதான பாதிப்பையே எடுத்துக்காட்டுகின்றது. மாகாணத்தின் கல்வி நிலை தொடர்பில் உடனடியாக அக்கரை செலுத்தவேண்டியது அனைவரது இன்றைய தேவையாக அமைகிறது.