வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிற்கும் காட்டுயானை!

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை குளத்தில் காட்டுயானை ஒன்று கடந்த இரண்டு நாட்களாக நிற்பதனை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.

இக் காட்டுயானை குளத்தின் தேக்கையடிக்குடா காட்டுப் பகுதியில் தண்ணீரில் நிற்பதும் பின்னர் நிலப் பகுதிக்கு வருவதுமாக அங்குமுங்கும் சென்று வருவதனை காணமுடிகின்றது. அத்துடன் இது தண்ணீரை குடித்து அத் தண்ணீரை மீள வௌியில் கொப்பளிக்கும் செயற்பாட்டினை அடிக்கடி மேற்கொண்டுவருவதனையும் காணக்கூடியதாகவுள்ளது.

இக் காட்டுயானையினை மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளுக்கு வராவண்ணம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் ஒருசில கிராம வாசிகளும் அவ்விடத்திலிருந்து கண்காணித்து வருவதாகவும் எம்மால் காணமுடிந்தது.

இவ் விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் வன ஜீவராசிகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்ட உத்தியோகத்தர் என்.சுரேஸ்குமாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும், அதற்கு மிருக வைத்தியர் சகிதம் தாங்கள் வரவுள்ளதாக தெரிவித்ததாகவும் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் எமக்கு தெரிவித்தார்.