நிலைத்திருக்கக் கூடிய திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டம் தொடர்பான முழுநாள் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைத்திருக்கக் கூடிய திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டம் தொடர்பான உள்ளுராட்சி சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், விவசாயத்திணைக்களங்களின் உத்தியோகத்தர்களுக்குமான ஒருநாள் பயிற்சிப்பட்டறை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் யுனொப்ஸ் நிறுவனம் மற்றும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிற்சிப்பட்டறையில் திண்மக்கழிவுகளில் இருந்து பசளை தயாரித்தல் தொழில்நுட்பங்கள், நிலைபேறான பசளைத் தயாரித்தலின் வியாபாரத் திட்டமிடல்கள், வெற்றிகரமான திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டங்களின் அனுபவப்பகிர்வுகள், ஆய்வுகளின் முடிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்படுத்துதல், நிறுவன ரீதியான திட்டமிடலும் திண்மக் கழிவுகளால் பசளை தயாரிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில், யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் எஸ்.சிமோனிற்றா, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன், விவசாய விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலதாசன், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஓ,மரியம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக யுனொப்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பதிகாரி எஸ்.சிவகுமாரன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சன் பெர்னாண்டோ, சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் முனமட் அகியார், கனேசா மதுசங்கி, நிலாந்தினி ஜெயசிங்க ஆகியோர் பங்கு கொண்டனர்.

உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சீர் செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவுகள் மூலம் பசளை தயாரிக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதற்கான நிலையங்களாக களுதாவளை, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஓட்டமாவடி, கொடுவாமடு ஆகிய இடங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கொடுவாமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் தவிர்ந்து ஏனைய நிலையங்கள் பூர்த்தி செயயப்பட்டு உள்ளுராட்சி நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 5 ஆண்டு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் யுனொப்ஸ் நிறுவனத்தினால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இவ் திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நீண்டகாலத்தில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்களில் கிராமங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்து சேதனப்பசளை தயாரித்து விற்பனை செய்யும் முறைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் உள்ளுராட்சி சபைகளுக்கு வருமான ஈட்டக்கூடிய சந்தர்ப்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.