தென்கிழக்கின் திரவியமாம் திராய்க்கேணி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் திருத்தல வருடாந்த திருச்சடங்கு மகோற்சவம் - 2016

(திராயூர் தீப்ஷா) ஈழத்தின் தென்கிழக்கு கரையில், இயற்கை எழில் கொஞ்சும், இந்துக்களின் வரலாற்றுத் தொன்மைமிக்க புகழ்பூத்த தமிழ்க் கிராமம் திராய்க்கேணியாகும். இங்கு இயற்கையாக வந்துறைந்து வேண்டியோரின் வினையகற்றும் அன்னையாக, கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும், காவல் தெய்வம் ஆதிபராசக்தி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆகும். 

இவ் ஆலய வருடாந்த மகோற்சவமானது, ஆலய பரிபாலன சபைத்தலைவரும் இந்துமத அறங்காவலருமான திரு சின்னத்தம்பி கார்த்திகேசு அவர்களின் நெறிப்படுத்தலில், துர்முகி வருடம் 19.10.2016 (புதன்கிழமை) அன்று திதி சதுர்த்தி கார்த்திகை நட்சத்திரமும் வியாகபாதம் யோகமும் கூடிய சுபமுகூர்த்த சுபமாலை வேளையில் திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி 22.10.2016 (சனிக்கிழமை) அன்று காலை தீமிதிப்புடன் இனிதே நிறைவுற்றது.
உற்சவ கிரியாகால நிகழ்வுகளில், முதலாம் நாள் புதன்கிழமை சுபமாலை வேளை திருக்கதவு திறக்கப்பட்டு மண்டபம் காவல் பண்ணுதலோடு அபிஷேக ஆராதனைகளும் இடம்பெற்றன. மாலைப்பூசை அம்பிகை அடியார்களான அக்கரைப்பற்று மஞ்சுளா குடும்பத்தினரின் உபயத்தோடு இடம்பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள், காலை வேளையில் பெண்களின் பால்குட பவனியோடு ஆரம்பமாகியதோடு, மதியப்பூசையும் மதிய நேர அன்னதானமும், திராய்க்கேணியைச் சேர்ந்த உபய காரர்களும் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் பக்தர்களுமான கார்த்திகேசு லீலாவதி குடும்பத்தினரின் அனுசரணையில் இடம்பெற்றன. அத்தோடு மாலைப் பூசையும் இரவு நேர அன்னதானமும், தம்பிலுவிலைச் சேர்ந்த இந்திரகுமார் சரோஜா முடும்பத்தினரின் உபயத்தோடு இடம்பெற்றது. 
மூன்றாம் நாளில் காரைதீவைச் சேர்ந்த உபயகாரர்களான நடேசபிள்ளை யமுனா குடும்பத்தினரின் பங்களிப்போடு நிழ்ந்த பகல் நவசக்தி கும்பபூசையினைத் தொடர்ந்து மாலை நெல்குற்றும் நிகழ்வுடன் தேவாதிகள் கன்னிமார் பிடிக்கும் வைபவமும் வினாயகர் பானையும் ஏற்றப்பட்டது. மாலைப்பூசை திராய்க்கேணியைச் சேர்ந்த லீலா குடும்பத்தினரின் உபயத்தோடு இடம்பெற்றதுடன், இரவில் தீக்குழியும் மூட்டப்பட்டது.
இறுதிநாள் நிகழ்வுகளாக அதிகாலை வேளையில் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று மஞ்சள் குளித்து திரும்பி வந்த அம்பிகை அடியார்கள் ஒருவர் பின் ஒருவராக தீக்குளிப்பு வைபவத்தில் பக்திப்பரவசத்தோடு கலந்து கொண்டனர். அதனைத்தொடாந்து இடம்பெற்ற வழிபாட்டுப்பூசை மற்றும் அன்னதானத்தோடு ஸ்ரீ முத்துமாரியம்மன் உற்சவம் இனிதே நிறைவுற்றது.
'அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்'