மட்டக்களப்பில் மீன் இசை சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் அருகில் நிர்மானிக்கப்பட்டுள்ள மீன் இசை சிறுவர் பூங்கா திங்கட்கிழமை மாலை (17.10.2016) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த வைபவத்தில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்த்தவ சமய அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் 5.375 மில்லியன் ரூபா செலவில் இந்த மீன் இசை சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பூங்காவுக்கான உபகரணங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பொருத்தியுள்ளார்கள். இந்த சிறுவர் பூங்காவானது சிறுவர்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல சிறுவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலப்படுத்துகின்ற பதப்படுத்துகின்ற வகையிலே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


சிறுவர் எதிர் காலத்தில் தங்களது வாழ்க்கையில் ஏற்படப் போகின்ற பல சவால்களுக்கு தங்களை உடல் ரீதியாக உள ரீதியாக பலப்படுததிக் கொள்வதற்காக இநற்த சிறுவர் பூங்கா வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளது.

இங்கு கொண்டு வருகின்ற சிறுவர்களை இதில் விளையாடிய பின்னர் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியது பெற்றார்களின் பொறுப்பாகும்.

இது உங்களுடைய சொத்தாகும். இதை மிக கவனத்தோடும் பராமரித்து சிறுவர்களுக்கு உகந்த இடமாக பாதுகாக்க வேண்டும்.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ  சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்திருந்த போது இந்த மாவட்டத்தின் சில பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வழங்கவேண்டுமென அவரிடம் கேட்டிருந்தேன்.

உடனே தமது குழுவினரை அனுப்பி எங்களது திட்டங்களை பரிசீலித்து சுமார் 100 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

இதைவிட இன்னும் 49 மில்லியன் ரூபா நிதியிலே இந்தப்பகுதியிலே அடுத்த கட்ட நிர்மானத்தை ஐக்கிய அபிவிருத்தி திட்டமான யு.என்.டி.பி.நிறுவனம் தொடங்கவுள்ளது.

அதனூடாக இந்தப்பகுதி விதவைப் பெண்களுக்கான தொழில் வாய்ப்பினை வழங்கும் பகுதியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.