நகைக்கடை உரிமையாளர் தலைமறைவு; அடகு வைத்த 31 பேர் பொலிஸில் முறைப்பாடு


மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாழங்குடாப் பிரதேசத்திலுள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் கடந்த சில நாட்களாகத் தலைமறைவாகியதை அடுத்து, அக்கடையில் நகைகளை அடகு வைத்த 31 பேர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.



மேற்படி நகைக்கடையில் அடகு வைத்த நகைகளை மீட்கச்;; சென்றபோது, குறித்த கடை உரிமையாளர் தலைமறைவாகியமை தமக்குத் தெரியவந்ததுடன், அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அடகு வைத்த தமது நகைகளை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கடை உரிமையாளரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த கடையில் கடமையாற்றும் பெண் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில்  செவ்வாய்க்கிழமை (25) பொலிஸார் கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதனை அடுத்து, இவர்கள் இருவரையும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா விடுவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.