நீண்ட காலமாக இயங்காத நிலையில் காணப்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் மின்விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

பழுதடைந்து நீண்ட காலமாக இயங்காத நிலையில் காணப்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் மின்விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன. மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பாலத்தின் ஊடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாலத்தின் மின்விளக்குகள் நீண்ட காலமாக இயங்காதுள்ளமையை கவனத்திற்கொண்டு, இதன் திருத்தப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்த போது இம்மின்விளக்குகளுக்குரிய மின்னிணைப்புக்கான வயர்கள் துண்டாடப்பட்டு களவாடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. மேலும், அண்மையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற சபையின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இவ்விடயம் ஆராயப்பட்டு மின்விளக்குகளின் திருத்தப் பணிகளை துரிதமாக செய்வதென்ற ஆலோசனையின் பிரகாரம் இவ்வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.


தற்போது இயங்கி வரும் மின்விளக்குகளின் பயன்பாட்டால் ஆயிக்கணக்கான பொதுமக்களே நன்மையடைகின்றனர். இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால் காவத்தமுனை, தியாவட்டவான், நாவலடி, பாலைநகர், மயிலங்கரைச்சை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஓட்டமாவடி பஸாரிற்கு பொருட்கள் வாங்குவதற்காகவும், வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் வந்து செல்வோர் எதிர்நோக்கும் அசௌகரியங்களால் மேற்குறித்த களவாடல் செயல்களில் ஈடுபடுவோர் அடைந்த பலன்கள் என்ன? என்பதை உணர்ந்து மனிதநேயத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதுடன், இம்மின்விளக்குகள் எரிவதனாலும், இதனை இயங்க வைப்பதனாலும் கிடைக்கும் பலன்கள் தனிநபர்களின் இலாபத்துக்காக அல்ல.

எனவே பொதுச் சொத்துக்கள் என்றவகையில் இதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதை மனதிற் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு இப்பிரதேச சபையின் செயலாளராகிய நான் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.