மட்டு வாகனேரியில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணுசிரம சக்தி வேலைத் திட்டம்!


மட்டக்களப்பு வாகனேரி காமாட்சி இளைஞர் கழகத்தினால் அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் முன்னுதாரணமான சமூக நோக்கம் கருதிய திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணுசிரம சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்  கோறளைப்பற்று தெற்கு(கிரான்) பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாகனேரி காமாட்சி இளைஞர் கழகம் பிரதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்டு பொது நூலகம் அமைத்தல் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி கழகத்தை தொடர்பு கொண்ட போது அதன் செயலாளர் வை.ஜெயந்தன் கருத்து தெரிவிக்கையில்,



எங்கள் கழகம் பிரதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்டு பொது நூலகம் அமைத்தல் திட்டத்திற்காக  இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது அதில் முதல் கட்டமாக ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 அந்த நிதியினை கொண்டு ஆறு இலட்சம் பெறுமதியான நூலக கட்டிடத்தை இளைஞர் சேவை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணித்து கொண்டிருக்கின்றோம்.

இதற்கு தேவையான மேலதிக நிதியினை மேற்படி கழக  உறுப்பினர்கள். வாகனேரி கிராம வாசிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்வந்து வழங்கியுள்ளதுடன் கட்டிட வேலைகளில் கழக உறுப்பினர்களும் நேரடியாக பங்குபற்றுகின்றனர் என தெரிவித்தார்.

மற்றும்  அதன் பொருளாளர் தற்போது 80 வீதமான வேலைகள் பூர்த்தியாகியுள்ளது மேலும் பூரணமாக நிறைவு செய்வதற்கு உதவிகள் தேவையாக  உள்ளது நலன்விரும்பிகள் யாராவது முன்வந்து உதவி செய்து இந்த திட்டத்தின் பயனை மக்கள் அடைவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்தார்.

இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் போன்றவர்கள் பொழுதுபோக்கு வசதிகள் இன்றி காணப்பட்டமைக்கும்   மாணவர்களின் பொது அறிவு திறன் வளர்ப்பதில் காணப்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்யும் நோக்கில் மேற்படி இளைஞர்களால் இவ் வேலைத் திட்டம் முன் மொழியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.