தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எந்த செயலையும் நாம் இனி அனுமதியோம்.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில், கடந்த வருடத்தில் தமிழர்களாகிய நாங்கள் சலுகைகளுக்காக சோரம் போகவில்லை. தமிழர்கள், உரிமைகள் பெறும்விடயத்தில் அர்ப்பணிப்பினையும், தியாகங்களையும் செய்தவர்கள். கடந்த காலத்தினைப்போல் அரசியல் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எந்த செயலையும் நாம் இனி அனுமதியோம். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.


கடந்த காலங்களில் தாம் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறினார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
மூன்று தசாப்தங்களாக உரிமைகள் தொடர்பாக செயல்பட்டு, மத்திய, மாகாண, உள்ளுராட்சி நிறுவனம் சார்ந்த, வெளிநாட்டு நிதி, போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தவில்லை. உரிமை தொடர்பான விடயத்தில் அக்கறையுள்ளவர்களாக செயற்பட்டமையால் இந்த விடயங்களில், அக்கறை இல்லாதவர்களாக இருந்துகொண்டோம். ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் எங்களை நாங்கள், மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளோம். கடந்த காலத்தில் உரிமைக்காக செயற்பட்ட நாங்கள் எங்களது செயற்றிட்டங்களை மாற்றி, உரிமையினையும், சமூகநலன்சார்ந்த அபிவிருத்தியினையும், சரிக்கு சமமாக பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். தமிழர்களை பொறுத்தவரையில், மூன்று தசாப்தங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், புதிய பிரதேச செயலகம், உள்ளுராட்சிசபை, கல்விவலயங்கள், இதுபோன்ற பொதுவிடயங்களில் ஒரு இனம் சார்பாகவே செயல்வடிவம் இருந்தது, அரச உயர்பதவிகள் வழங்கும் போது தமிழர்கள் புறக்கணிப்பு, அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி தமிழ் பிரதேசங்களில் உள்ள காணிகளை கபளீகரம் செய்தல், மத்திய மாகாண அரசின் வளங்களை பயன்படுத்தி நிதியொதுக்கீடு செய்யும் போது தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை, உயரதிகாரிகள்  பதவியுர்வு, இடமாற்றம் செய்யும் போது இனப்பாகுபாடு காட்டுதல், மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் அமைச்சர்கள் ஒரு பக்கசார்பாக செயற்படுதல், அபிவிருத்தியில் சில பிரதேசத்தில் ஒருபக்கசார்பான மிதமிஞ்சிய நிதியொதுக்கீடு, அரச நிருவாக அலுவலகங்கள் அமைத்தல், மத்திய மாகாண அரசியல் அதிகாரத்தின் ஊடாக தமிழர்களுக்கு எதிரான செயலில் ஈடுபடல், அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி ஒரு இனத்திற்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இனியும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. என்றார்.