மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் படித்தவர்கள் உயர் பதவிகளில் உள்ளனர்


 (க.விஜயரெத்தினம் ) மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியில் படித்தவர்கள் எல்லாம் பண்பாகவும், உயர்கல்வி நிலையிலும், வெளிநாடுகளில் உயர்பதவிகளிலும்  உள்ளார்கள் என்றும், நான் அறிந்திருக்கின்றேன் என்றும், கிழக்கு மாகாண கல்வியமைச்சின்செயலாளர் டீ.சி.எம் அசங்க அபேவர்த்தன தெரிவித்தார்.  

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும்  நிகழ்வு  வியாழக்கிழமை (19.1.2017) காலை 9.45 மணியளவில் அதிபர் ஜே.ஆர்.பீ. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றபோது கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன தெரிவித்தார்.

அவர் பேசுகையில் :- இப்பாடசாலையில் இன்று நடைபெறும் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான மிகவும் சிறப்பாகவுள்ளது. அதிபர் தலைமையிலான நிருவாகச் செயற்பாடுகள், அதற்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவ சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் இவை அனைத்தும் சாலச்சிறந்ததாகும். இதனை நான் பாராட்டுகின்றேன். இதைவிட மாவட்டத்தில் சிறந்த வலயக்கல்விப்பணிப்பாளராக இவ்வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும் சிறந்த நிருவாகச் செயற்பாட்டை மேற்கொள்கின்றார். இவரையும் நான் பாராட்டுகின்றேன். இப்பாடசாலை இலங்கையில்  மிகவும் பழமை வாய்ந்ததும், மிகவும் புகழ் பெற்றதாகவும் காணப்படுகின்றது. இப்பாடசாலையின் நிகழ்வுகள் யாவும் சந்தோசமாகவும்,நேர்த்தியாகவும் அமைந்துள்ளது.இதனை ஒழுங்கு செய்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இப்பாடசாலை இம்மாவட்டத்திற்கும், இப்பிரதேசத்திற்கும் சிறந்த கல்வியை வழங்குகின்றது. இம்மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுக்கும், அவர்களை படிப்பித்து நல்ல பிரஜையாக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர்களின் ஆர்வம் உயர்தரம் வரை கொண்டு செல்லவேண்டும். இப்பெற்றோர்கள் புலமைப்பரீட்சை மட்டும் சித்தியடைந்தால் போதும் என்று இருக்ககூடாது. ஒவ்வோரு பெற்றோரும் இதனை உணர்ந்து செயற்படுவதன் மூலம்; பிள்ளைகளை சமூகம் எதிர்பார்க்கும் நற்பிரஜையாக்க  உருவாக்க முடியும். இதற்கு பெற்றோர்கள்  முனைப்புடன் செயற்பட வேண்டும். என்னை இப்பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்ததிற்கு நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.