இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற அரசியல் தலைமைகளாக நாங்கள் செயற்படுவோம் கிழக்கு மாகாண முதலமைச்சர்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் .


இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற அரசியல் தலைமைகளாக நாங்கள் செயற்பட வேண்டும். மாறாக இருக்கின்ற பிரச்சினைகளைகளையும் ஊதிப் பெருப்பித்து புதிது புதிதாகப் பிரச்சினைகளை உருவாக்குகி;ன்ற அரசியல் தலைமைகளாக நாம் இருக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விஷேட இடம்பெயர் சேவை திங்களன்று (16.01.2017) முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடம்பெயர் சேவையில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,


கடந்த 30 வருட காலம் இடம்பெற்ற மிக மோசமான யுத்தத்தின் காரணமாக இந்த நாடு பேரழிவை எதிர்கொண்டது.
அதிலும் வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மை இனங்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் ஏராளம்.

உயிர், உடமைகள், அசையும் அசையாச் சொத்துக்கள் என்பனவற்றை தமிழ் முஸ்லிம் மக்கள் இழந்ததோடு அரசியல் உரிமைகளையும் இழந்து பரிதவிக்க நேரிட்டுள்ளது.
யுத்தத்தின் விளைவாக தாம் குடியிருந்த காணிகளும் வாழ்விடங்களும் வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருந்த நிலபுலன்களும் பறிபோய்விட்டன.
எனவே, இத்தனை பிரச்சினைகளையும் இந்த நல்லாட்சி அரசு தீர்த்து வைக்க வேண்டும் என்று மக்கள் எதிபார்ப்புடன் இருக்கின்றார்கள்.

சிறுபான்மை சமூகங்கள் அரசியல் அடிமைகளாக உரிமைகள் அற்றவர்களாக வாழ வேண்டும் என்ற மஹிந்த ராஜபக்ஸவின் ராஜ்யம் தோற்றுப் போனது. அதே நிலைப்பாட்டை சிறுபான்மைச் சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.
சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் தீர்வு உடனடியாக தரப்பட வேண்டும்.

அதற்காக பல விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கின்றோம்.' என்றார்.