வரட்சியால் 85% வயல் நிலங்கள் கருகி பாதிப்பு : விவசாயிகள் நிர்க்கதி

தம்பிலுவில் , திருக்கோவில்   கமநலசேவை பிரிவுக்குட்பட்ட 85 சதவீதமான வயல் நிலங்கள், வரட்சியினால் கருகியுள்ளதாக, தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தின் நிறைவேற்றுச் செயலாளரும் விவசாய பெரும்போக அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.சிதம்பரநாதன் தெரிவித்தார்.
இதனால், விவசாயிகள் பாரியளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


குறித்த பகுதியில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயச் செய்கை, அதற்காக அவர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பல கண்டங்களை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் பெரிய நீர்ப்பாசனத்தின் கீழ் 4,000ஏக்கர், சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் 3,600 ஏக்கர், மானாவாரியாக 8,065 ஏக்கர், மேட்டு நிலப்பயிர்செய்கையாக 320 ஏக்கர் அடங்கலாக 15,985 ஏக்கர் நிலபரப்புக்களில் மகா போக பயர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   இந்நிலையில் சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் வரும் 67 குளங்களும் பெரிய நீர்ப்பாசனத்தின் கீழுள்ள கஞ்சிகுடியாறு, ரூபஸ்குளம், சாகாமம் ஆகிய 3 குளங்களும் வரட்சியால் நீர்மட்டம் குறைந்து வற்றிய நிலையில் காணப்படுகின்றன.

இதனால், குளங்களை நம்பி விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட 6,883 ஏக்கரும் மானாவாரியை நம்பி விவசாயம் செய்த 7,995 ஏக்கர் உள்ளடங்கலாக 14,878 ஏக்கர் வயல் நிலங்கள், முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்தோடு, 75 சதவீதத்துக்கு மேற்பட்ட சோளம், கச்சான், மிளகாய் மரக்கறிவகை போன்றவற்றுடன் பப்பாசி பழச்செய்கை போன்ற மேட்டு நிலப்பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பான அறிக்கைகளை பிரதேச செயலகம், விவசாய திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வழங்கியுள்ளதாக  தெரிவித்த அவர், விவசாய காப்புறுதி செய்தவர்களுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொடுக்கும் வகையில் காப்புறுதி நிறுவனத்துக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 இது தவிர எதிர்வரும் போகத்தில் விதைநெல் தட்டுப்பாடு தோன்றும் நிலை உருவாகலாம் என்பதை கருத்திற்கொண்டு, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரினூடாக அறிவித்துள்ள அதேவேளை, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விவசாய திணைக்களம் தோள் கொடுத்து உதவி வருவதாகவும் குறிப்பிட்டார்.

 இதேவேளை, தாங்கள் ஜீவநோபாயமாக மேற்கொண்டு வரும் விவசாய செய்கை முன்னொருபோதும் இல்லாதவாறு, இம்முறை பாதிக்கப்பட்டுள்ளமையானது, பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலை எமது நாட்டிலும் உருவாகாமல் கடவுளுக்கு அடுத்தபடியாக இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் தங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அத்தோடு, வங்கிகளில் தாம் பெற்ற கடனை எவ்வாறு மீளச்செலுத்துவது என்பது தெரியாமல், திணறுவதாகவும் அன்றாட உணவுத்தேவை குடீநீர் பிரச்சினைகளுக்கும் தற்போது முகம் கொடுப்பதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர். -