முஸ்லிம் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ முடியுமா என்பதுதான் இப்பொழுதுள்ள பிரச்சினை - அலிஸாஹிர் மௌலானா MP

( -ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

முஸ்லிம் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ முடியுமா என்பதுதான் இப்பொழுது முஸ்லிம்களுக்குள்ள பிரதான பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேசம் மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம வீதிகள் பலவற்றைப் புனரமைப்புச் செய்யும் வேலைகளை சனிக்கிழமை மாலை (21.01.2018) ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.

சுமார் 60 மில்லியன் ரூபாய் செலவில் அமுலாக்கம் செய்யப்படவுள்ள இத்திட்டத்தில் முதற் கட்டமாக 16 உள் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.



நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானாளூ
காணி, நீர் விநியோகம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், விவசாயம், மீன்பிடி, நிருவாக அதிகாரிகளின் இனத்துவேஷ புறக்கணிப்பு உள்ளிட்ட பல  பிரச்சினைகளுக்கு இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தற்போது முகங்கொடுத்து வருகின்றார்கள்.
ஆயினும், அவற்றையெல்லாம் விட இந்த நாட்டில் நூற்றாண்டு காலங்களாக கௌரவமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இனிமேலும் கௌரவமாக வாழ முடியுமா என்ற அச்சமும் பீதியுடனுமே இப்பொழுது காலங்கடத்துகின்றார்கள்.

கொழுந்து விட்டெரியும் பிரச்சினையாக முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

முஸ்லிம் அரசியல்வாதிகள் 'என்னால்தான் இந்த அபிவிருத்தி செய்யப்பட்டது' என்று தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொண்டு சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளையிட்டு ஒற்றுமைப்பட வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு சென்று அதற்குத் தீர்வு காண வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கும்போது தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருந்து கொள்ளக் கூடாது.

பயங்கரவாத கால கட்டத்தில் ஒட்டு மொத்தமான இந்த நாட்டுக்கே ஆபத்து நேர்ந்த பொழுது அதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் என்னையே நான் தியாகம் செய்து எனது அந்தஸ்துமன் கூடிய மற்றுமுள்ள அனைத்துப் பதவிகளையும் தூக்கி வீசியெறிந்து விட்டு நாட்டைவிட்டுச் சென்றவன் நான்.
ஆனால், இப்பொழுது மதவாதிகள் ஏனைய சில்லறைகளெல்லாம் நாட்டைக் காக்கப் போவதாக கூக்குரலிடுவது பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டுக்காக அன்று தொடக்கம் இன்று வரை சிறுபான்மையினர் தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட தியாகமுள்ள சிறுபான்மையினரில் ஒரு சாராராகிய முஸ்லிம்களையும், முஸ்லிம்களுக்கு நன்னெறி போதிக்கின்ற கல்லூரிகளையும் இந்த நாட்டின் தற்போதைய நல்லாட்சி நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ சர்வதேச பயங்கரவாதிகளான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு துணைபோகின்றவர்கள் என்று அறிவீனமான முறையில் அபாண்டத்தைச் சுமத்துகின்றார்.
இதுபற்றி அவர் முகத்திற்கு முன்னாலே நான் நாடாளுமன்றத்தில் கடுந்தொனியில் ஆங்கிலத்தில் கர்ச்சித்தேன். ஏனென்றால் இந்த அபாண்டத்தை சரவ்தேசத்தின் செவிகளுக்கும் எட்டச் செய்வதற்காக.' என்றார்.