மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா வீட்டில் நபரொருவருக்கு கோடரி வெட்டு -

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டப்பட்டுக் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (26ஆம் திகதி) பிற்பகல்  இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்டில் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேவேளை சிவகீதாவின் கணவரைப் பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில்  கடந்த வருடம் ஒக்ரோபெர் 23ஆம் திகதி மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைத செய்திருந்தனர்.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில்
டிசெம்பெர் 05 2016 அன்று நான்கு சந்தேக நபர்களும் தலா 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல  நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி ஒப்பமிட வேண்டும். இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகளை, எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக 2008 தொடக்கம் 2013வரையில் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திக் கிடைத்த தகவலின்படி - கோடரி வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயரின் கணவர் கனகசபை பிரபாகரன் (வயது 47) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.