டெங்கினால் நேற்றும் இருவர் உயிரிழப்பு!

இதுவரை... திருமலையில் 16; கிண்ணியாவில் 14பேர் பலி; தொடர்ந்தும் பதற்றம்

டெங்கு நோய் தீவிரமாக பரவிவரும் திருகோணமலை மாவட்டத்தில் நேற்றும் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணாவார். இதனால் கிண்ணியா, திருகோணமலை நகரம் மற்றும் மூதூர் பகுதிகளில் தொடர்ந்தும் பதற்றம் காணப்படுகிறது.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

டெங்கு நோய் பாதிப்பினால் திருகோணமலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 16 ஆக உயர்ந்துள்ளது. இதில் கிண்ணியாவில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கிண்ணியா மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளநிலையில் கிண்ணியா மற்றும் தோப்பூரில் நேற்றும் இருவர் உயிரிழந்தனர்.

கிண்ணியா பைசர் நகரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயதான கர்ப்பிணிப் பெண் ஜெகுபர் ஜெசீமா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். டெங்குத் தொற்றினால் இவர் உயிரிழந்திருப்பதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.


அதேநேரம், திருகோணமலை தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நூறு முஹமது நுபைர் என்ற 27 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்தார். டெங்கினால் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் கர்ப்பிணித் தாய்கள் இருவர், பாடசாலை மாணவி ஒருவர் உள்ளடங்குகின்றனர். கிண்ணியாவின் காக்காமுனை, இடிமண், முனைச்சேனை உள்ளிட்ட பகுதிகளில் அதிக டெங்குத் தொற்று காணப்படுகிறது.

மூதூர் மருத்துவ சுகாதார அதிகாரி பிரிவில் 435 பேரும், திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் 470 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூதூரில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும், கிண்ணியா மற்றும் திருகோணமலை நகரப் பகுதிக்கு பலர் தொழில்நிமித்தம் சென்று வருவதால் நோய் பரவுவதைத் தடுப்பதில் சிக்கல் காணப்படுவதாக மூதூர் மருத்துவ சுகாதார அதிகாரி வைத்தியர் யாகூப் ஜெஸ்மி தினகரனுக்குத் தெரிவித்தார்.

டெங்குநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றபோதும், மாலை வேளைகளில் மழைபெய்வதால் நோய் தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்குவதைத் தடுப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.