கல்முனை கல்வி வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது - ஏ.எம்.அஹுவர்

 (எஸ். அஷ்ரப்கான்)

 கல்முனை கல்வி வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவை கோரி இலங்கை ஆசிரியர் மகா சங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தத் தொடரில் அண்மையில் கல்முனை மாநகர சபைக்கட்டிடத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை சந்தித்து சம்பள நிலுவைக் கோரிக்கை முறையீட்டைத் தெரிவித்தது.

 அந்த சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களிடம் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு பணிப்புரையினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்தார்.

 அதற்கு அமைய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர்  முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் சந்தித்து கல்முனை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கோரிக்கை குறித்த கடிதத்தைக் கையளித்தார்.

 அந்த கடிதத்தில் கல்முனைக் கல்வி வலயத்தில் கடமையாற்றும் சுமார் 1600 ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இதற்கு ஏறத்தாழ 121 மில்லியன் தேவைப்பாடாக உள்ளது. இந்த விடயம் முதல்வரோடு கலந்துரையாடிய போது தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாகத் தனது கவனத்தில் எடுத்து இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக கிழக்கு முதலமைச்சர் உறுதியளித்ததாக இலங்கை மகா ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எம்.அஹுவர் தெரிவித்தார்.


 மேலும் இது குறித்துக் கருத்துக் கூறுகையில் கிழக்கு முதலமைச்சர் உறுதியளித்ததின் பிரகாரம் விரைவாக இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரத்தவறின் நாம் தொழிற்சங்கங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்ற வரன்முறைக்கு உட்பட்ட போராட்ட வடிவங்களில் ஒன்றுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படும் என்பதையும் இவ்விடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

 இலங்கை மகா ஆசிரியர் சங்கம் கல்முனை கல்வி வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவை கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை அண்மையில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது