தற்கொலைகளுக்கு காரணம் தனியனா? சமூகமா?



தற்கொலை என்பது தனியனை மையப்படுத்திய விடயம்; எனினும் இப்பிரச்சினை சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதும் சமூகம் எனும் அமைப்பினையும் அதுசார் வலைப் பின்னலையும் அதன் செயற்பாட்டினையும் சிக்கலுக்குள்ளாக்கும் ஓர் சமூக விடயமாக உள்ளது.

தற்கொலையென்பது ஒரு மனிதன் தன்னுடைய தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளையும் சாமர்த்தியங்களினையும் அறியாத மனிதன் தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்வதற்காக தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செயலாகும்.

தற்கொலையை எளிதான ஒரு செயற்பாட்டு விடயமாக நிர்ணயித்துவிட முடியாது ஏனெனில் உலகளாவியரீதியில் இது ஒரு முக்கிய சமூகப்பிரச்சினையாகக் காணப்படுவதுடன் எமது சமூகத்திலும் தற்கொலைகள் அதிகரித்துச் செல்லும் போக்கு சமூகம் நோய்ப்பட்டுள்ளது என்பதனையே எடுத்தியம்புகின்றது.


பாலினம், வயது, திருமண நிலை, உடல் ஆரோக்கியம் குறிப்பாக தாங்க முடியாத  உடல் உள நோய்களின்; நோய்த்தாக்கம், பாரம்பரிய மற்றும் மூளைசார் நோய்கள் மற்றும் மனநலம் தொடர்பிலான உளவியல் பிரச்சனைகளும் உளப்பலவீனமும், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், சமூக விரோத சிந்தனைகளும் செயற்பாடுகளும், வேலையில்லாப் பிரச்சினை, சமூத்தினால் தனிமைப்படுத்தப்படல், பெற்றோருடன் அல்லது துணையுடன் அல்லது நம்பிக்கைகுரியவர்களுடன் எழும் பிரச்சினைகள், பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் எழும் மன அழுத்தம், சமூகத்திடம் அல்லது தாம் சார்ந்தோரிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பு, கருணை, ஆதரவு கிடைக்காத நிலையில் எழும் விரக்திநிலைகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார விடயங்கள் எனப் பல காரணிகள்  ஒருவரது தற்கொலை முடிவுக்குக் காரணம் ஆகின்றன.
தற்கொலை தொடர்பாக பெசில்பென்சல் (BessilBenzel) என்பவர்; குறிப்பிடுகையில் 'சமூகத்தில் ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சினை, வேறு எவ்வகையிலும் தீர்க்க முடியாது என்ற எண்ணத்தில் இறுதியாக எடுக்கும் முடிவு தற்கொலை' என்கிறார். தற்கொலையைப் புரிந்து கொள்ளத் தத்துவவாதிகளும், அறிஞர்களும் உளவியல் நிபுணர்களும் பல வகைகளில் முயன்றும் போராடியுமுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு சமூகவியலாளர் Emile Durkhiem  தற்கொலைக்கான கலாச்சார சமூகவியல் காரணங்களை முதலில் ஆய்வுசெய்தார். அவர் தன் ஆய்வின் அடிப்படையில் தற்கொலையை நான்கு வகையாக வகுத்துள்ளார்.
1. தன் முனைப்புசார்  தற்கொலை -     (Egoistic Suicide)
2. பொதுநலப் பண்புசார் தற்கொலை -    (Altruistic Suicide)
3. முரண்பாட்டு நிலைசார் தற்கொலை -   (Anomic Suicide)
4. துர்மரணம் விபத்து சார்ந்த தற்கொலை - (Fatalistic Suicides) என்பனவாகும்.

சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்படும் நபர் தனது மேலாண்மையை நிலைநாட்ட மேற்கொள்வது தன்முனைப்புசார் தற்கொலை என்படுகின்றது. இது தற்புகழ்ச்சிக்கும், சுயமரியாதைக்கும், அதிமுக்கியத்துவம் கொடுப்பவர்கள் செய்துகொள்ளும் தற்கொலையாகும். இரண்டாவது பொதுநலநோக்கில் தற்கொலை செய்வது. ஒரு குழுவுடனோ, அரசியல் தலைவர்கள் மீதோ, அரசாங்கம் அல்லது சமுதாயத்தின் மீதோ அதிக பற்று காணப்படுமிடத்து அதன் நன்மைக்காக ஒருவன் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதனை இது குறிக்கும். இது போர்களில் வீரர்கள் நாட்டுக்காக உயிர் துறப்பதற்கு ஒப்பானது.

சமூகத்தில் பொருளாதார, அரசியல் ரீதியாக இருக்கின்ற பிறழ்வு நிலையால் ஏற்படும் தற்கொலை மூன்றாவது வகையில் உள்ளடங்குகின்றது. நெறிபிறழாமல் நல்ல முறையில் நடக்கும் ஒரு மனிதரின் வாழ்வில் ஏற்படும் தாறுமாறான குளறுபடிகளாலும் பிரச்சினைகளாலும் ஏற்படும் சீர்குலைவால் செய்துகொள்ளும் தற்கொலைகளை இதற்குக் குறிப்பிடலாம். இறுதியாக துர்மரணம் மற்றும் விபத்து சார்ந்த தற்கொலைகளைக் குறிப்பிட முடியும்.
எமில் துர்க்கைம் (Emile Durkhiem)இன் கருத்துப்படி 'தற்கொலையின் விளைவு எவ்வாறிருக்கும் என்ற பூரண விளக்கமுடைய ஒருவரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் மரணமாகும். ஒருவன் தன்னைத் தானே சுட்டுக் கொல்வதையோ அல்லது தூக்கில் தொங்குவதையோ நேரான செயல் என்று குறிப்பிடலாம். ஒருவன் எரிகின்ற கட்டிடத்தில் இருந்து வெளியேறாமல் இருப்பது அல்லது சாகும்வரை உணவை மறுப்பது என்பன எதிர்மறைச் செயல்களாகும்.
இத்தகைய தற்கொலைகளுக்கு சமூகம், தனிமை என இரண்டுமே காரணிகளாக அமையலாம். இவை வெவ்வேறு சூழ்நிலைகளின் காரணமாக வேறுபடுகின்றன. இதனை முடிவுசெய்யும் ஆற்றல் உளவியல் சார்ந்ததல்ல சமூகம் சார்ந்தது என்று துர்க்கைம் உறுதியாகக் கூறுகிறார். இவ்வகையில் தற்கால சமூகங்களில் அதிகரித்து வரும் சமூகப் பிரச்சினைகளுள் முக்கிய பிரச்சினையாக தற்கொலை காணப்படுகின்றமை ஆய்வுகளுக்கூடாக தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு காரணம் தனியனா? சமூகமா? என்பது தொடர்பாக விவாதிக்கின்றபோது சமூக செயல்களினால் பாதிக்கப்படுகின்ற தனிமனிதன் தனிமையாக்கப்பட்டு தற்கொலையை நாடுகின்றான் எனலாம். அதாவது தனிமை என்பது தற்கொலையினை தூண்டுகின்ற ஓர் உளநோயாக மாறிவிட்டது. தனிமை என்று கூறும்போது தாய் தந்தை இன்றி தனிமையில் வாழுதல், திருமணத்தின் பின்பு கணவன் அல்லது மனைவியின் இறப்பு மற்றும் பிரிவு, உறவுகளிடம் இருந்து ஓரங்கட்டப்படும் நிலைமை என தனிமையினை பலவாறு வரையறுக்கலாம். இவ்வாறான தனிமை நிலைமைகள் சமூகத்தில் தற்கொலை உணர்வினை ஊக்கப்படுத்தும் காரணிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக சமூகத்தில் ஓர் அங்கமாக காணப்படும் பெண் கணவன் இறந்தவுடன் தனிமையாக்கப்படுகின்றாள். மேலும் விரும்பியோ விரும்பாமலோ சமூகத்தால் அவள் ஓரங்கட்டப்படுகின்றாள்.


இவ்வாறான நிலைமைகளில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களும் புறவயமான மற்றும் அகவயமான பிரச்சினைகளும் காணப்படத்தான் செய்கின்றன. சில பெண்கள் சமூக பிரச்சினைகளை சவாலாக கொண்டு வாழ்ந்தனர், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சில பெண்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க தெரியாமல் தற்கொலையை நாடுகின்றமை கண்கூடு.

மேலும் சந்தோசம், துக்கம், கவலை, வெற்றி, தோல்விகளைக் கையாள்வது எப்படி என்று தெரியாதவர்களும் போதுமான தொடர்பாடற்றிறன் அற்றவர்களும் பிற நபர்களிடம் உணர்வுரீதியான உறவை மேற்கொள்ளத் தயங்குபவர்கள் முடியாதவர்களிடமும் தற்கொலைகள் ஏற்படுகின்றன. சமூக உளவியல் அடிப்படையில் நோக்கினால் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமும் மனநலம் குன்றியவர்களிடமும் தற்கொலை தொடர்பான சிந்தனைகளும் எண்ணமும் அதிகமான காணப்படும்.

உடல்நலமின்மை, ஊனம், ஆளுமைக் குறைபாடு, உளச்சிதைவு, அடிக்கடி மாறும் மனநிலை போன்றன தற்கொலை உணர்வை தூண்டிவிடும் முக்கியக் காரணிகளாகவுள்ளன.

தற்கொலை முடிவை எடுப்பவர்கள் தங்கள் மரணத்தின்மூலம் பழிவாங்கல், தண்டனை மற்றும் நோயிலிருந்து தப்பிப்பது, மீட்பு, தியாகம் போன்ற விடயங்கள் நிறைவேறுகின்றன என நம்புவதாகத் தற்காலச் சமூக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நாம் வாழும் கலாச்சாரச் சூழலுடன் தொடர்புடைய உயிரியல், மரபியல் மற்றும் சமூகக் காரணிகள்தாம் இந்தக் கற்பனைகளை விளைவிக்கின்றன.

தற்கொலைகள் தற்செயலாக நிகழ்வதில்லை என்று கூறும் வல்லுநர்கள், தற்கொலை செய்து கொள்ளும் 90 சதவீதத்தினர், மனநல பிரச்சினைகள் மற்றும் தனிமையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக இளவயதினரிடையே தற்கொலைக்கு காரணம் தனிமை என்பது புலனாகிறது. இந்த வயதுப் பிரிவில் உடல் நலக் குறைவுக்கு முதல் காரணியாக இருக்கும் மன அழுத்தம்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது. தனிமையால் உண்டாகும் கவலை, வன்முறை மற்றும் போதைப்பொருள் உபயோகித்தல் போன்றவை காரணமாகவும்,  சூழ்நிலை மாறுபடுதல், பாடசாலைகளில் கடினமான சூழல் நிலவுவது, நண்பர்களுடன் பிரச்சினை மற்றும் பாலியல் அடையாள முரண்பாடுகள் போன்ற வேறு சில நுட்பமான காரணங்களும் கூட தற்கொலைக்கான காரணிகளாக அமையும் சந்தர்ப்பங்களுமுண்டு.

தற்கொலை எனும் பிரச்சினையே மிகவும் சிக்கலான ஒன்று அதற்கு பல சிக்கலான காரணங்களுமுண்டு. மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் அனைவரும் தற்கொலை செய்து கொள்வார்கள் எனக் கூறமுடியாது. பல சமூகங்களில் தற்கொலை செய்துகொள்ளும் நடத்தை என்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. பல சமூகங்கள் மனநலப் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடவும் விவாதிக்கவும்  தொடங்கியிருக்கின்றன. வேறு பல சமூகங்கள் இதை ஒரு பெரிய விடயமாகக் கருதாததன் காரணத்தினால் இப்பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதேயில்லை.


இதனிடையே பொதுச் சுகாதார வல்லுநர்கள் மன நலப் பிரச்சனைகளில் ஒரு குறிப்பான பிரச்சினையாகவும் சமூக ரீதியில் பாரிய சவாலாகவும் காணப்படும் தற்கொலை எனும் பிரச்சினையினை கவனமாக கையாளவேண்டிய தேவையுள்ளது என்பதனை வலியுறுத்துகிறார்கள். காரணம் தற்கொலையென்பது வேகமாகப் பரவும் சமுதாய வியாதி போல் கருதப்படுகிறது.

னிமை என்பது தற்கொலைக்கு காரணமாகும் விதம் ஒருபுறமிருக்க சமூகம் எவ்வாறு தனியனிடத்தில் தற்கொலை உணர்வை தூண்டுகின்றது என்பதும் நோக்கப்படவேண்டியுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக உடல், உள ரீதியாக அச்சுறுத்தலுக்குள்ளாபவர்கள் அல்லது மிரட்டப்படுபவர்களிடமே சுயமும் மனமும் பாதிப்புக்குட்பட்டு அதிகமாக தற்கொலை செய்துகொள்ளும் போக்கு காணப்படுகிறது. ஆனால் அச்சுறுத்தலுக்குட்படுதல், மிரட்டப்படுவதுதான் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்றும் கூற இயலாது.

அவற்றை கையாள்வதில் ஏற்படும் சிக்கல் நிலைமைகளும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய அகப்புறக் காரணிகளும்தான் தற்கொலைகளைத் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக மிகைப்படுத்தப்பட்ட பரபரப்பான பல செய்திகளை வெளியிடும் வெகுசன ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் போன்றன உடல், உள ரீதியாக பலவீனமானவர்களை இலகுவில் தாக்குவதன்மூலம் அவர்களை தற்கொலை நடத்தைக்குத் தூண்டுகின்றன. இவ்வாறான பல சம்பவங்களை எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தற்கொலை என்பதனை சமூகவல்லுநர்கள் 'சமூக தொற்றுநோய்' என்கிறார்கள்.

தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதோ அல்லது தற்கொலை செய்து கொள்வதோ சமூக, சமய, சட்ட மற்றும் கலாசார ரீதயில் குற்றமாகும். தற்கொலை போன்ற சமூக நோய்களை குறைப்பதற்கு நீண்ட கால நிலைபேறான தற்கொலைத் தடுப்பு உபாயங்களும் யுக்திகளும் தேவைப்படுகின்றன. அவற்றினை அரசும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும் உருவாக்கி செயற்படுத்தி நடாத்தவேண்டும், அதற்கு சமூகமட்ட அமைப்புக்களும் அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டியதும் இன்றியமையாதது.

எனவே உலக போக்குகளுக்கும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கும், சமூக, சமய, கலாசார நடைமுறைகளுக்குமேற்ப தற்கொலை எண்ணம் கொண்டவர்களை சமுதாயரீதியிலும் தனிமனிதரீதியிலும் அணுகி ஆலோசனைகளையும் அவர்களுக்குத் தேவையான சேவைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகவுள்ளது. குறிப்பாக தற்கொலையினால் ஏற்படும் தனிமனித மற்றும் சமூகத்தாக்கங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் தெரிந்து வைத்திருத்தலும்  தற்கொலைகளை தடுப்பதற்காக செயற்பட வேண்டியதும்  அவசியம். குறிப்பாக சமுதாயத்தில் விரக்தி நிலை மற்றும் தற்கொலை தொடர்பான எண்ணம் அல்லது முடிவினை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பாக தகவல்களை சக நண்பர்களிடம், உறவினர்களிடம் பெற்று குறித்த நபருக்கு உரிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவருக்கு நெருங்கியவர்கள் மூலம் வழங்குதல், சமுதாயரீதியில் அதற்கு பொருத்தமான ஆலோசனை வழிகாட்டல் துறையின் ஊடாக ஆலோசனைகளை வழங்குதல், குடும்பம் உறவினர்களுக்கிடையே சிறப்பான உறவு


நிலைமைகளைப் பேணுதல், மனம் விட்டு தங்களது இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான சூழ்நிலைமைகளை உருவாக்குதல், சமுதாய வாழ்விற்கான நம்பிக்கையினைக் கட்டியெழுப்புதல் போன்ற பல செயற்பாடுகள் மூலம் மக்கள் மத்தியில் நிலவும்  புரிந்துணர்வின்மையாலும் சிறப்பான சமூக இடைவினை இன்மையாலும்; நாளுக்கு நாள் எமது சமுதாயத்தில் அதிகரித்துவரும்  கொடும்செயலான தற்கொலைகளை குறைக்கலாம்.

தொகுப்பு:- இராமலிங்கம் தயாணி,
 சமூகவியல் சிறப்புத்துறை.