கிண்ணியா, திருமலையில் H1N1 வைரஸ் தாக்கமும் இருப்பதாக அறிவிப்பு

கிண்ணியா பிரதேசம் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பிரதானமான பிரச்சினையாக இருந்தாலும் இன்புளுவென்ஸா (எச்.1 என் 1) வைரஸ் தாக்கமும் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்' நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார நேற்று தெரிவித்தார். கிண்ணியா உள்ளிட்ட திருமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உலக காச நோய் தினத்தின் நிமித்தம் சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கிண்ணியா பிரதேசம் உள்ளிட்ட திருமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைவதற்கு தேவையான எல்லாவித சூழலும் காணப்படுகின்றன.

அதுவும் வழமையான இடங்களை விடவும் புதிய இடங்களில் டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு பல்கி பெருகுவதும் கண்டறியப்பட்டுள்ளன. டெங்கு தீவிரமடைந்துள்ள இம்மாவட்டப் பிரதேசங்கள் அடங்கலான எல்லா இடங்களிலும் நுளம்பு ஒழிப்புக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.


டெங்கு கட்டுப்பாட்டு பணிகளை முன்னெடுக்கவென டொக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களும் தொண்டர்களும் திருமலை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தேவையான அளவு மருந்துப் பொருட்களும், புகை விசிறல் கருவிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை இன்று புதன் கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு கிண்ணியா பிரதேசம் உள்ளிட்ட திருமலை மாவட்டத்தில் விஷேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

என்றாலும் டெங்கு காரணமாக கிண்ணியா உள்ளிட்ட திருமலை மாவட்டத்தில் சுமார் 16 பேர்' உயிரிழந்துள்ளனர். ஆனால் முழு நாட்டிலும் சுமார் 40 பேர் இந்நோயினால் உயிரிழந்துள்ளதோடு, 23,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர நேற்று தெரிவிதார்.