ஒலுவில் துறைமுகத்தை மூடத்தீர்மானம் : அரசுக்கு நஷ்டமே தவிர வருமானம் இல்லை : அமைச்சர்

ஒலுவில் மீன்பிடித்துறை முகத்தை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்தார்.

இத்துறைமுகத்தால் அரசுக்கு ஐந்து சதமேனும் வருமானம் கிடையாது. நஷ்டமே எதிர்நோக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக  கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,

ஒலுவில் மீன் பிடித்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு விட்டது. இனி அதன் திறப்பு விழா நடத்தப்பட வேண்டியதே எஞ்சியுள்ளது. ஆனால் இத்துறைமுகத்தை  திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இத்துறைமுகத்தில் மண் நிறைகிறது.


இன்று  மீண்டும் இத் துறைமுகத்தில் மண் நிறைந்துள்ளது. இந்த மண்ணை அப்புறப்படுத்துவதற்காக  ரூபா 350 மில்லியன் செலவழிக்க வேண்டும். அத் தொகையை செலவழித்து துறை முகத்திலுள்ள மண்ணை அப்புறப்படுத்தினாலும் மீண்டும் அங்கு மண் நிறையும். இதனால் அரசுக்கு எதுவிதமான இலாபமும்  இல்லை. மாறாக நஷ்டமே ஏற்படுகின்றது.

மண்ணை வெளியேற்றுவதற்காக செலவு செய்யப்படும் ரூபா 350 மில்லியனை மீளப் பெறமுடியாது. அத்தோடு இத்துறைமுகத்தால் எந்தவிதமான வருமானமும் இல்லை. எனவே மீனவர்களும் இத்துறைமுகத்தை மூடிவிடுவதை ஆதரிக்கின்றார்கள்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சில் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதில் அதிகாரிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடி விடுவதற்கும் அதனை  வேறொரு இடத்தில் திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.