புனிதப் பிரதேசத்துக்குரிய காணிக்கு உறுதிப்பத்திரங்களை வழங்க யாருக்கும் அனுமதி கிடையாது: சோமரத்ன தேரர்

புனிதப் பிரதேசத்துக்குரிய காணிக்கு, வேறு உறுதிப் பத்திரங்களை வழங்க யாருக்கும் எந்தவொரு அனுமதியும் கிடையாது என குலுகுணாவ ரஜமகா விகாரையின் விகாராதிபதி கிரிந்திவல சோமரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாணிக்கமடு பிரதேசத்தில் பிக்குகள் தங்குமிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அப்பிரதேச பிக்குகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை)  எதிர்ப்புத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் பிரதேசம் சட்டரீதியாக ஒரு புண்ணிய பிரதேசமாகும். இதற்கு நாம் நேற்று சட்ட ரீதியான அனுமதியைப் பெற்று வந்தோம். இதன்போது, முஸ்லிம் மக்கள் தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தங்களிடம் இதற்கான காணி உறுதிகள் இருப்பதாக கூறுகின்றனர்.


மாணிக்கமடு பிரதேசமும் தீகவாபி விகாரைப் பகுதிக்குரியது. சமாதானம் ஏற்பட்டதன் பின்னர், இப் பிரதேசத்தில் இருந்த பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் போது இப்பிரதேச முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகின்றது” என சோமரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசவாசிகள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையினையடுத்து குறித்த நிர்மாணப் பணிகள் பொலிஸாரினால் 05 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.