புத்தாண்டு சிந்தனை-குற்றால அருவிபோல் குளிர்மையான செய்தி வரும்!


 ( ரவிப்ரியா)










குற்றுயிராகிக் கொண்டிருக்கும் தமிழர் உரிமைகள் மறந்து,
குரவை போட்டு புத்தாண்டாம் ஹேவிளம்பியை,
குதூகலமாக வரவேற்று மகிழ்வுடன் கொண்டாட,
குரல் அடைத்து நீ குமுறுவதுதானே யதார்த்தம்?


குலை நடுங்க நிமிர்ந்து நின்ற நீ
குடல் தெறிக்க எங்கே ஓடுகின்றாய்?
குரோதம் வளர்த்து குட்டிச் சுவரான நீ,
குறிக்கோள் இன்றி குழம்புகின்றாயா?

குறை சொல்லி சொல்லியே ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும் நீ கண்டதென்ன?
குடும்பமானாலும் அரசியலானாலும் சுயநலம் பேணி,
குத்துவெட்டு செய்வதுதான் உனக்கான சுபாவமா?

குருடனாக இருந்தது போதும் தோழா!
குமுறி அழுததும் இனியும் வேண்டாம்!
குற்றம் குறைகள் தேடி கறை பூசி களிப்பது,
குழி தோண்டி எம்மைப் புதைப்பதற்கு ஒப்பானது!.

குல மத பேதம் பார்த்து பிரிய. பிரிய –
குதறவரும் இனவாதிகளின் இரையாகி போவாய்!
குட்டக் குட்ட குனியும் இனமாகவே இருப்பாய்!
கும்பிடுகின்றேன் உன்னை ஒற்றமையை பலப்படுத்து!

குட்டையைக் குழப்பி குளிர் காய நினைக்காதே!
குன்றின் மேலிட்ட விளக்காய் இனம் நிலைக்க,
குறுக்கு வழி சென்று சுயநலம் பேணாமல்,
குடும்பமாக இனத்தை நேசித்து நிமிர்ந்து நில்!

குள்ள நோக்குடன் கொடிய அரசியல் நரிகள்,
குமட்டி வரும் வாந்தி போன்ற தீர்வு வார்த்தைகள்,
குத்திக்கரணம்தான் நாளும் நாம் போட்டாலும், -
குதிரைக் கொம்புதான் எமக்கான அரசியல் விடிவுகள்!

குறள் வழி நீதி காட்டிய வள்ளுவரும்
குயில்  பாட்டு பாடிய பாரதியும்,
குருவாக இருந்து தனி வழிகாட்ட,
குருதி சிந்தாத அறவழியில் போராடு!

குறைப் பிரசவம் செய்யும் அரசியல் கட்சிகளும்,
குண்டுகளையும் ஆயுதங்களையும் நம்பிய பிரபாவும்
குறிக்கோளை அடைய முடியாதுதான் போனாலும்,
குடும்பம் குடும்பமாக இணைந்து அறவழியில் போராடு!

குடுகுடுப்பைக்காரன் மாதிரி உடன் சரிவருமென்று,
குறிப்பாகச் சொல்லும் விடயம் இதுவல்ல. எனினும்,
குழந்தை குமரியாகி கிழவியாகும் காலம் கடந்தாலும்,
குற்றால அருவிபோல் குளிர்மையான செய்தி வரும்!.