நீதிமன்ற உத்தரவின் பிரதியை கிழித்து காலால் மிதித்த செயலால் பரபரப்பு

( ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

கிழக்கு மாகாண சபையின்  76வது அமர்வு செவ்வாயக்கிழமை  25.04.2017 நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாகாண சபைக்கு முன்னாலுள்ள பிரதான வீதியை வழிமறித்து வேலையற்ற பட்டதாரிகள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

தங்களது போராட்டத்தை அமைதியான முறையிலும் எவருக்கும் அசௌரிகத்தை ஏற்படுத்தாத வண்ணமும் முன்னெடுக்கமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச்.எம். ஹம்ஸா பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பிரதியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தென்னே ஞானானந்த தேரர்  கிளித்து காலால் மிதித்த  செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அவ்விடத்தில் அதிகளவான கலகம் அடக்கும் பொலிஸாரும் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களும் குவிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 4000க்கும் அதிகமான பட்டதாரிகள் தமக்கான அரச தொழில் வாய்ப்பைக் கோரி இரண்டு மாதங்களுக்கு மேலாக தெருவோரங்களில் வந்தமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பட்டதாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை திருகோணமலையிலுள்ள மாகாண சபைக்கு முன்னால் போராட்டத்தில் குதித்தனர்.