தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் வேண்டுகோளுக்குப் பதில் என்ன?

வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவுபெறப் போகின்றது. அப்போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, காரைதீவு ஆகிய இடங்களில் பட்டதாரிகளான இளைஞர்களும் யுவதிகளும் இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் பல்கலைக்கழக உள்வாரிப் பட்டம் பெற்றுக் கொண்டோரைப் பார்க்கிலும், வெளிவாரிப் பட்டதாரிகளே ஏராளமாக உள்ளனர். அதேபோன்று கலைப் பட்டதாரிகளையும் வர்த்தகப் பட்டதாரிகளையுமே அதிகம் காண முடிகின்றது. கணித விஞ்ஞான துறைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது.

பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுக் கொண்ட தங்களுக்கு அரசாங்கம் தொழில்வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் வீதியோரத்திலேயே சமைத்து உண்டு, அங்கேயே உறங்கி இப்போராட்டத்தை தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அவ்வப்போது கோரிக்கைக் கடிதங்களையும் அவர்கள் அனுப்பி வருகின்றனர். அவர்களது போராட்டம் இரு மாத காலத்தை நெருங்குகின்ற போதிலும், அனுகூலமான முறையில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதை இதுவரை காண முடியவில்லை.

மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் தங்களைக் கைவிட்டு விட்டதாக அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அதேசமயம் தாங்கள் தொழில்வாய்ப்புக் கோரி தொடர்ந்தும் போராடப் போவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கிழக்குப் பட்டதாரிகள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்த வேளையில் அனைத்து ஊடகங்களும் இதற்கு முன்னுரிமை வழங்கியிருந்தன. உள்ளூர் அரசியல்வாதிகளும் போராட்டக் களத்துக்குச் சென்று பட்டதாரிகளைச் சந்தித்துப் பேசி, சாதகமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

காலப்போக்கில் அப்போராட்டத்துக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து போனது. ஊடகங்களில் இப்போதெல்லாம் முக்கியத்துவம் பெருமளவில் குறைந்து போயுள்ளது. அரசியல்வாதிகளும் இவ்விடயத்தைப் பெரிதுபடுத்துவதாகத் தெரியவில்லை. எனவே தொழில்வாய்ப்பற்ற இப்பட்டதாரிகள் தற்போது நம்பிக்கையிழந்து போய்க் காணப்படுகின்றனர். தங்களுக்கு எக்காலமும் தொழில்வாய்ப்பே கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஒருவித அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது.

அரசாங்கமும் மாகாண சபையும் இவ்விடயத்தில் காண்பிக்கின்ற அலட்சியமே உண்மையில் அவநம்பிக்கை தருகின்றது. அதேசமயம் இந்த உதாசீனப் போக்கு பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.

இப்பட்டதாரிகளுக்கு தொழில் நியமனம் வழங்குவதற்கான பதவி வெற்றிடங்கள் கிழக்கில் கிடையாதா? இல்லாது போனால் இவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கான நிதி நிலைமை மாகாண சபையிடமோ அரசாங்கத்திடமோ இல்லையா? அரசாங்க வேலைவாய்ப்புத் துறை ஆளணி வெற்றிடங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற கற்கை நெறிகளில் தேர்ச்சி பெற்றோர் இப்பட்டதாரிகளில் இல்லாமல் உள்ளனரா? அரசாங்க தொழில்துறைகளில் தற்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற ஆளணிக்கு இப்பட்டதாரிகள் பொருத்தமானவர்களாக இல்லையா?

இவ்விதமான பலவிதமான வினாக்கள் எமக்குள்ளே எழுகின்றன. அலட்சியத்துக்கான காரணம் எதுவாக இருப்பினும், அதற்கான உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் கிழக்கு மாகாண சபைக்கும் உள்ளது. இல்லையேல் பொதுமக்கள் மத்தியில் எழுகின்ற வெறுப்பும் அதிருப்தியும் தவிர்க்க முடியாததாகி விடலாம். ஆகவே இப்பட்டதாரிகளுக்கு உறுதியான பதிலை வழங்குவதே இப்போதைக்கு அவசியமாகும்.

இது ஒருபுறமிருக்க வட மாகாணம், மற்றும் மேல் மாகாணம் போன்ற பிரதேசங்களில் கிழக்கு மாகாணத்தைப் பார்க்கிலும் பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள போதிலும், அங்கெல்லாம் தொழிலில்லாப் பிரச்சினையென்பது கிழக்கைப் போன்று அதிகமானதல்ல. இதற்கென சில காரணங்களும் உள்ளன.

மேல் மாகாணத்தை எடுத்துக் கொள்வோமானால், அரசாங்க துறையைப் பார்க்கிலும் தனியார் துறை வேலைவாய்ப்புகளே அங்கு அதிகமாகும். அதேசமயம் இன்றைய நவீன யுகத்துக்குப் பொருத்தமான கற்கை நெறிகளில் தேர்ச்சி பெற்றுக் கொண்டோரை உள்வாங்குவதற்காக தனியார் நிறுவனங்கள் எப்போதுமே அங்கு தயார் நிலையில் இருக்கின்றன.

இவ்வாறு தேர்ச்சி பெறுவோருக்கு கூடுதல் வேதனத்தையும் அந்நிறுவனங்கள் வழங்குகின்றன. இவ்வாறான ஆளணி வெற்றிடத்துக்கு ஏற்ற வகையில் இளைஞர், யுவதிகளும் தங்களுக்கான கற்கை நெறிகளைத் தெரிவு செய்து கொள்கின்றனர். எனவேதான் மேல் மாகாணம் போன்ற பெருநகரப் பகுதிகளில் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் குறைவாகக் காணப்படுகின்றனர். கிழக்கில் இவ்வாறான வசதி வாய்ப்புகள் இல்லாதது துரதிருஷ்டமாகும். அங்கே இன்றைய நவீன யுகத்துக்குப் பொருத்தமான தனியார் நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவற்றுக்குப் பொருத்தமான ஆளணியும் அங்கில்லை.

எனவேதான் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அங்கு பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினையென்பது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. பட்டதாரிகளுக்கு தொழில் நியமனம் வழங்குவதென்பது தீர்க்க முடியாத பெரும் சிக்கலாக உருவெடுக்கத்தான் போகின்றது.

அரசும் மாகாண சபையும் இவ்விடயத்தை இனிமேலும் அலட்சியப்படுத்துவது உசிதமானதல்ல. இதற்குத் தீர்வு காணக் கூடிய எதிர்காலத் திட்டங்களை இப்போதே வகுத்துக் கொள்வதுதான் முக்கியம்.