திருமலை துறைமுக பிரயோசனமற்ற எண்ணெய் குதங்களை வைத்துக்கும்பிட முடியுமா? அரசாங்கம் கேள்வி

திருமலை துறைமுகத்தில் காணப்படும் எண்ணெய் குதங்களை கொண்டு வருமானம் பெறாமல் சாமி கும்பிட முடியுமா? அவற்றைக் கொண்டு இலாபம் அடைவதில் என்ன தவறு என்று    அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
திருமலை துறைமுகத்தில் கடந்த 100 வருடங்களாக எண்ணெய் குதங்கள் வெறுமனே கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு எந்தப் பயனும் பெறப்படவில்லை. 40 வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர். ஜயவர்த்தன இந்த எண்ணெய் குதங்களை  அமெரிக்காவுக்கு வழங்க முற்பட்ட போது அப்போது இந்தியாவிற்கு  வழங்குமாறு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன . 
இன்று அவற்றை இந்தியாவிற்கு வழங்க முற்படும் போது எதிர்க்கின்றனர்.  இவற்றைக் கொண்டு என்ன செய்வது?  இந்த எண்ணெய் குதங்களை பயன்படுத்தி வருமானம் பெறுவதில் என்ன தவறு இருக்கிறது.  இந்த எண்ணெய் குதங்களை வைத்துக்கொண்டு சாமி கும்பிட முடியுமா? 
முட்டாள்தனமான தர்க்கங்களை முன்வைக்கக்கூடாது. இங்கு இலங்கையும் இந்தியாவும்  இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காகவே குத்தகைக்கு  எண்ணெய் குதங்கள் வழங்கப்படவுள்ளன. குத்தகைக்கு  வழங்குவதை   விற்பதாக கூறுவதென்றால் குத்தகை என்பதன் அர்த்தமென்ன? 
கேள்வி: வடக்கு மக்கள் ஹர்த்தல் நடத்துவதற்கான  காரணத்திற்கு என்ன பதில்?
பதில்: காணாமல்போனோர் பிரச்சினை குறித்து நாம் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம்  நடவடிக்கை எடுத்தும் இருக்கின்றோம். நானும் அந்த போராட்ட மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினேன்.  அவர்கள்  ஒரு புகைப்படத்தைக் காட்டி    அந்த புகைப்படத்தில் இருக்கும் காணாமல்போன பிள்ளை   ஜனாதிபதியுடன்  அருகில் இருப்பதை   புகைப்படமொன்றில் கண்டதாக கூறினர்.  எனவே அந்த விபரங்களை எனுக்கு அனுப்புமாறு கூறினேன். 
1971 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் மற்றும் 88 ஆம் ஆண்டு காணாமல் போனவர்களையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கு  இன்னும் மரண சான்றுகள் வழங்கவில்லை. மரண சான்றுகள் வழங்குவதிலும்  ஒரு சிக்கல் நிலவுகிறது.  மரண சான்றிதழ் வழங்கிய பின்னர் சம்பந்தப்பட்டவர் உயிருடன் வந்துவிட்டால் என்ன செய்வது? எவ்வாறெனினும்  இந்தப் பிரச்சினை தீர்ப்பது தொடர்பில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சட்டத்தின் பிரகாரம் இதனை தீர்ப்பது தொடர்பில்  சிந்திக்கிறோம்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தி நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு   அதிகாரங்கள்  அடங்கிய  இராணுவ தளபதி பதவியொன்றை   வழங்குவதற்கு ஜனாதிபதி  முன்வந்திருக்கிறார்.
முப்படையையும் பொலிஸாரையும் கொண்டு  நாட்டில்  ஒழுக்கத்தை  ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பதவியை  பொறுப்பேற்பதற்காக  தான் தற்போது வகிக்கும்  அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கும் சரத் பொன்சேகா  தயாராக இருக்கிறார்.
நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக  அரசியல் ரீதியான  ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.  எந்தவொரு விடயம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தாமல்  திடீரென  ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தப் போராட்டங்களையும்  நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக பேச்சுவார்த்தை நடத்தி   தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பிலும்  ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்தி மக்களை  அசௌகரியங்களுக்கு உட்படுத்துகின்றனர். 
இந்த நிலைமையை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே இவ்வாறு அரசாங்கத்திற்கு  எதிராக அரசியல் ரீதியில்  ஆர்ப்பாட்டங்களை நடத்தி  மக்களை  அசௌகரியப்படுத்துபவர்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது அமைச்சர் பதவியையும்  எம்.பி. பதவியையும் இராஜினாமா செய்துவிட்டு   அரசாங்கத்திற்கு எதிராக  அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கட்டுப்படுத்தி  நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்த  இரண்டு வருடங்களுக்காக  விசேட பதவியொன்றை ஏற்க முடியுமா என அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்   கேள்வி எழுப்பினார். 
அதாவது  முப்படைகளையும்  பொலிஸாரையும் கொண்டு  இவ்வாறு  நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும்  விசேட பதவியொன்றை தான் வழங்குவதாகவும்  அதற்கு  உடன்பட முடியுமா என்றும்   ஜனாதிபதி கேட்டிருந்தார்.  அதாவது   அதிகாரங்களையும் கொண்ட இராணுவ தளபதி போன்ற ஒரு பதவியையே  பொன்சேகாவுக்கு வழங்க ஜனாதிபதி முன்வந்துள்ளார். 
கேள்வி:- மற்றுமொரு கோத்தபாயவை உருவாக்குவதற்காக பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியை வழங்கப்போகின்றீர்களா?
பதில்:  அப்படி இல்லை. கோத்தபாய யார் என்று உங்களுக்குத் தெரியும். கோத்தபாயவுக்கு மஹிந்த ராஜபக்ஷவே அஞ்சி கொண்டிருந்தார்.  ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதானம் தொடர்பாக  ஒரு குழுவினருடன்  பேச்சுவார்த்தை  நடத்திக்கொண்டிருந்த போது அங்கே  கோத்தா வந்துகொண்டிருந்தார். அதனை கண்ட மஹிந்த ராஜபக்ஷ  கோத்தபாய வருகிறார் என பதறியடித்துக்கொண்டு   கூறியதுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தவர்களை  ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார். இவ்வாறு தான்  மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் செய்தார். எனவே  கோத்தபாய  யார் என்பது எங்களுக்குத் தெரியும். 
கேள்வி: சரத் பொன்சேகாவை நியமித்து ஆர்ப்பாட்டங்களை நிறுத்த முடியுமா?
பதில்: அவர் நிறுத்துவார்.  
கேள்வி: எவ்வாறான பதவி சரத் பொன்சேகாவுக்கு  வழங்கப்படும்?
பதில்: அதிகாரம் கொண்ட இராணுவத் தளபதி போன்ற பதவி வழங்கப்படும். ஆனால் அனைத்துப் படைகளையும் அவர் நிர்வகிப்பார்.  
கேள்வி:  பொன்சேகா எம்.பி. பதவியை இராஜினாமா செய்யத் தயாரா?
பதில்: அதிகாரம் உடைய பதவி கிடைத்தால்  எம்.பி. பதவியை இராஜினாமா செய்ய அவர்  தயார். 
கேள்வி: தொழில் சங்கங்களின்  நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயலுகின்றீர்களா?
பதில்: அரசியல் ரீதியாக செயற்படுவதற்கு அவர்களுக்கு இடமளிக்க முடியாது. 
கேள்வி: ஏன்  அரசாங்கத்தினால்  ஒழுக்கத்தை ஏற்படுத்த முடியாதா?
பதில்: இங்கு பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். நாட்டின் பாதுகாப்பும்  முக்கியம் அதேநேரம் ஒழுக்கமும்  முக்கியம் எனவே இந்த இரண்டு விடயங்களையும் முன்னெடுப்பதற்காகவே சரத் பொன்சேகாவை நியமிக்கின்றோம். 
கேள்வி: அண்மையில் கடற்படை தளபதி  ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியிருந்தார். அப்படியிருந்தும் இது போன்ற தீர்மானங்களை நீங்கள் எடுப்பது சரியா?
பதில்:  அவர்  ஊடகவியலாளரின் கொலரைமட்டும் தான் பிடித்தார்.
கேள்வி: இவ்வாறு செய்வதற்கு பதிலாக   தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாமே?
பதில்: எவ்வளவு கோரிக்கைகளை  நிறைவேற்றியுள்ளோம் என்று  உங்களுக்குத் தெரியும். வரவு, செலவுத்திட்டத்தின் ஏற்பாடுகளைக் கூட நாங்கள் திருத்தியிருக்கின்றோம். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியே வருகின்றோம். ஆனால்  யாரோ ஒரு அதிகாரி எதனையோ கூறினார் என்பதற்காக   ஒருநாள் வேலைநிறுத்தம் செய்த   வைத்திய அதிகாரிகள் சங்கம்  எமது நாட்டில்தான் உள்ளது.  மனிதாபிமானமற்ற முறையில்  எதனையும் செய்வதற்கு  அனுமதிக்க முடியாது.  முன்னர்  கொழும்பில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அஞ்சினர். கோத்தாவுக்கு அஞ்சி  ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்தனர். இப்போது   அந்தப் பயம் போய்விட்டது.  அதனால் நினைத்தவுடன் கொழும்பு வந்து ஆர்ப்பாட்டங்களை செய்கின்றனர். 
கேள்வி: வேலைநிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தால்  சரத் பொன்சேகா அவற்றை எவ்வாறு நிறுத்துவார்?
பதில்; அவற்றை அவர் அழகாக செய்வார்.  
கேள்வி: ஏன் பொலிஸாரைக் கொண்டு சிவில்  நிர்வாகத்தை  முன்னெடுக்க முடியாதா?
பதில்:- இராணுவத்தைக் கொண்டு செய்வதிலும் தவறில்லை  தற்போது யுத்தம் இல்லை. இராணுவமும் ஏதாவது செய்வதற்காகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.  எனவே  அவர்களைப் பயன்படுத்துவதில்  தவறில்லை. 
கேள்வி இதன்மூலம் நாடு இராணுவமயமாகுமே?
பதில்: அவ்வாறு இல்லை.   இராணுவத்தின்  சேவைகளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. 
கேள்வி:  சிவில் நிர்வாகத்தில்  இவற்றை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லையா?
பதில்:  இவற்றை  செய்வதன் மூலமே   முதுகெலும்பை  நாம் காட்டுகின்றோம். இந்த புதிய நியமனம் மூலம்    நாம் முதுகை நிமிர்த்த முடியும்.  
கேள்வி: ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா?
பதில்: பார்ப்போம். 
கேள்வி: கோத்தா செய்ததையே  பொன்சேகா செய்வாரா?
பதில்: அப்படி இல்லை.  பொன்சேகா  கஷ்டப்பட்டவர்,  கஷ்டங்களை அறிந்தவர்.  அநீதிக்கு எதிராக அவர் செயற்படுவார். 
கேள்வி: அப்படியாயின் நாட்டில் சிவில் நிர்வாகம் வீழ்ச்சியடைந்துவிட்டதா?
பதில்:- அப்படித்தான் மக்களும் கூறுகின்றனர்.   அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கின்றோம்.  முன்னைய அரசாங்கத்தின் திருடர்களையும் கொலைகாரர்களையும் பிடிப்போம்.  
கேள்வி:  அமைச்சரவையின்  அமைச்சர்கள் அனைவரும்  இந்த யோசனையை  ஏற்றுக்கொண்டனரா?
பதில்: சிறப்பான  தீர்மானம் என்று கூறி ஏற்றுக்கொண்டனர். 
கேள்வி: சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனரா?
பதில்: சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதிதான் இந்த யோசனையையே முன்வைத்தார். 
கேள்வி: இதன்மூலம் தொழிற்சங்கங்களை அச்சுறுத்துகின்றீர்களா?
பதில்: அமைச்சரவையில் பேசப்பட்டதை கூறுகின்றேன். 
கேள்வி: பொன்சேகாவுக்கு இராணுவ தளபதி பதவி வழங்குவதற்கு பதிலாக  சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கலாமே?
பதில்: அது நல்ல யோசனை, அது தொடர்பில் நாங்கள் பேசலாம். ஆனால்    சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்கினால் அதில் பொலிஸார் மட்டுமே உள்ளடங்குவர். 
கேள்வி: குப்பை பிரச்சினைக்கு என்ன தீர்வு?
பதில்: குப்பைகளைக் கொட்டுவதற்காகத்தான் முத்துராஜவெல மற்றும் தொப்பை ஆகிய பிரதேசங்களை தெரிவு செய்தோம். ஆனால் அங்கும் குப்பைகளை கொட்டவேண்டாமென  ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மீதொட்டமுல்ல குப்பை எங்களுக்கு வேண்டாமெனக் கூறுகின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பேசுபவர்கள்  குப்பை விடயத்தில்  பிரித்து பார்க்கின்றனர்.  ஒவ்வொரு சந்தி சந்தியாக  சமஷ்டியை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். 
கேள்வி: அப்போது இதற்கு என்னதான் தீர்வு?
பதில்: அதற்குத்தான் சரத் பொன்சேகாவை விசேட பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம். 
கேள்வி : அப்படியானால் அமைச்சர்களாகிய உங்களால் எதனையும் செய்ய முடியாதா?
பதில்: ஒருவரால் அனைவரையும் கட்டுப்படுத்த முடியாது. உங்களால்  உங்கள் நிறுவனத்தின் அனைவரையும் கட்டுப்படுத்த முடியுமா? முடியாது.  அதனால் தான் இவ்வாறான ஏற்பாடுகளை செய்கிறோம். 
இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எவ்விதமான உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடமாட்டார்.  ஆனால் அரசாங்கம் இந்தியா ஜப்பான் சீனா போன்ற நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்யும்.
இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.  அந்த புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்ட பின்னர்  அதன்கீழ்  10 உடன்படிக்கைகள்  செய்யப்படும்.   அவை பொருளாதாரம், சமூக,கலாசாரம் என்பவற்றை  உள்ளடக்கியிருக்கும். 
அதேபோன்று  சீனா,  ஜப்பான் , ஐரோப்பிய  ஒன்றிய நாடுகளுடனும் உடன்படிக்கைகளை செய்யவிருக்கின்றோம்.  அந்த நாடுகள் எம்மிடம்  உடன்படிக்கை செய்ய கேட்கவில்லை. மாறாக   நாங்களே அந்த நாடுகளிடம்  உட்படிக்கை செய்துகொள்ளுமாறு கோருகின்றோம்.    
இலங்கைக்கு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி விஜயம் செய்யும்போது எந்த உடன்படிக்கையும் கைசாத்திடப்படாது.  அவர்  வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்ளவே இலங்கை வருகிறார்.  
11 ஆம் திகதி இலங்கை வரும் நரேந்திர மோடி 12 ஆம் திகதி  கொழும்பில்  வெசாக் தின ஆரம்ப வைபவத்தில் கலந்துகொள்வார். அதன்பின்னர்  டிக்கோயாவில்  வைத்தியசாலை ஒன்றை திறந்து வைப்பார். மாலை  அவர்  நாடுதிரும்பிவிடுவார்.  அதனைத் தவிர வேறு எதனையும் அவர்  முன்னெடுக்கமாட்டார். 
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக  கொண்டுவரப்படவுள்ள  புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது சட்டமூலத்தை தயாரிப்பதற்காக  அந்தக் கொள்கைத் திட்டம் சட்டவரைபு திணைக்களத்திற்கு  அனுப்பப்படவுள்ளது. இந்தக் கொள்கைத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கம் தெரிவித்துள்ளது.
இன்னும்  புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. அதற்கான  கொள்கைத் திட்டமே தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாகவே இதனைக் கொண்டுவருகின்றோம்.  
இது  சர்வதேச தரங்களுக்கு  அமைய  உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.  எனவே இதனை  சட்டவரைபு திணைக்களத்திற்கு  அனுப்பி  சட்டமூலத்தை தயாரிப்போம். 
கேள்வி: இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கூற முடியுமா?
பதில்: இதில் அதிக விடயங்கள் உள்ளன. சட்டமூலம் வந்ததும் அவற்றைப் பார்க்க முடியும்.
கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தில் நாளை  (இன்று)  இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வழங்குவது தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதற்காக  அவசரப்பட்டு  இதனை நிறைவேற்றினீர்களா?
பதில்: அப்படி இல்லை.  இவ்வாறு ஒன்றை செய்யுமாறு  கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நாங்கள் அதனை செய்திருக்கின்றோம். 
கேள்வி: இம்முறை  ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்குமா?
பதில்: அதனை  ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும்.  ஐரோப்பிய ஆணைக்குழு  இலங்கைக்கு  அந்த சலுகையை வழங்க பரிந்துரை செய்துள்ளது.  அந்தப் பரிந்துரை  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.  ஐரோப்பிய பாராளுமன்றம்  இறுதித் தீர்மானத்தை எடுக்கும். ஐரோப்பிய ஆணைக்குழு முன்வைக்கும் தீர்மானம்  தோல்வியடைந்ததில்லை. 
கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திபடுத்துவதற்காக  இந்த சட்டமூலம் உருவாக்கப்படுகிறதா?
பதில்: தற்போது இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக கூறப்படுகின்றது. எனவே அதில் மாற்றம் செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனால் சர்வதேச ரீதியான  பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு சர்வதேசமும் இணக்கம் தெரிவித்திருக்கிறது.