அதிபர்களும் ஆசிரியர்களும் சரியான முறையிலே தங்களுடைய முறையான விளைவை காட்ட வேண்டிய தேவையுள்ளது.


(துறையூர் தாஸன்)

சரியான முறையிலே மாணவப் பருவத்திலே வழி கெட்டுப் போகாமல் ஒழுங்கான முறையிலே பிள்ளைகளை வழி நடத்த வேண்டிய தேவைகளை இந்த நாட்டிலேயுள்ள பாடசாலைகள் கொண்டிருக்கின்றன.எனவே அவ்வாறான சேவைகளை செய்ய வேண்டியது பாடசாலை சமூகத்தினதும் பாடசாலை ஆசிரியர்களினதும் பொறுப்பாக இருக்கிறது என கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் அதிபர் வடிவேல் பிரபாகரன் தெரிவித்தார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில், ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்ல இருக்கின்ற ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து குறிப்பிடுகையில்,பாடசாலைகளிலே நியமிக்கப்படுகின்ற ஆலோசணையும் வழிகாட்டலுக்குமுரிய ஆசிரியர்கள் மாத்திரமல்லாமல் ஏனைய ஆசிரியர்களும் அவ்வாறான சேவைகளை செய்ய வேண்டிய தேவை இக்காலத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.



ஒழுக்காற்றுக் குழு என்கின்ற குழு பாடசாலைகளிலே இருந்து ஒழிக்கப்பட்டு இப்போது பாடசாலைகளிலே இணக்கமான இணக்க சபைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.இணக்க சபைகள் பாடசாலைக்கு வெளியே மாத்திரமல்ல பாடசாலைக்குள்ளும் இருக்க வேண்டும் என்கின்ற கல்வியமைச்சின் சுற்று நிருபம் எங்களை காட்டி நிற்கின்றது.

அதனுடைய அர்த்தம் என்னவென்று சொன்னால்,மாணவர்களை ஒழுங்காக வழி நடத்துவது மாத்திரமல்ல அந்த மாணவர்களுக்குள்ளே எழுகின்ற சிறிய பெரிய பிரச்சினைகளை நாங்களாகவே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இன்றைய பாடசாலை சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் வட மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள், குடும்பங்களோடும் பிள்ளைகளோடும் உறவாட வேண்டிய காலப்பகுதியில், காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பகிரங்கமாக ஈடுபட்டு மழை வெயில் என பாராது தெருவோரமாக கடந்த மூன்று மாத காலமாக காலத்தை கடத்தி வருகின்றனர்.ஆசிரியர் பதவிகளுக்காக விண்ணப்பிக்க வேண்டிய தேவையும் தகைமையும் அவர்களுக்கு இருக்கின்றது.உள்வாங்க வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அதிபர்களும் ஆசிரியர்களும் சரியான முறையிலே தங்களுடைய விளைவை காட்ட மாறுப்பார்களாக இருந்தால்,அவர்களை தண்டிக்க வேண்டிய மற்றும் இடமாற்றங்களை கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும் என்கின்ற இறுக்கமான செய்தி, கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மந்திரியின் வாயிலாக வந்திருக்கின்றது.எனவே இவ்வாறானதொரு இறுக்கமான சூழ்நிலை பாடசாலைக்கும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் இந்த நாளிலே ஒரு சிவப்புக்கொடியாக பார்க்கின்றோம்.

போட்டியான சமூதாயத்திலே பிள்ளைகளை முறையாக வழி நடத்தி சரியான வகையிலே வழி காட்ட வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு இருக்கிறது.காரணம் பாடசாலைக்குள்ளே பல விதமான தொழிநுட்ப இயந்திரங்களும் பல விதமான வாயில் போட்டு மெல்லுகின்ற போதை வஸ்து சார்ந்த பொருட்களும் பாடசாலைகளுக்குள்ளே படிப்படியாக நுழையவிடப்படுகிறது.

கல்முனை நகரிலே அமைந்த இந்தப் பாடசாலை மாணவர்களையும் பாடசாலைச் சூழலையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை சமூகத்துக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உரியது.பாடசாலைச் சமூகம் விழிப்படைகின்ற போது தான் அந்த சமூகம் சிறப்பாக இருக்கும்.
பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் நீங்கள் மீளவும் முன்னைய இடத்துக்கு வர வேண்டிய சூழல் இருந்தால் நிச்சயமாக மீண்டும் வாருங்கள்.நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெஸ்லி பாடசாலையின் கதவுகள் திறந்துகொண்டே இருக்கும்.

உங்களது கடந்த கால சேவைகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அவை மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பாடசாலை சமூகத்தினாலும் மறைக்கப்படுவதுமில்லை மறக்கப்படுவதும் இல்லை என்றார்.