தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு நிகழ்வு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு நிகழ்வு  வேப்பவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் கிராம சேவை உத்தியோகஸ்தர் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் அவரின் அலுவலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச முதியோர் அமைப்புக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இம் மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரினால் கேட்டறியப்பட்டது. இதன் போது பிரதேசத்தில் நிலவும் குடிநீர்ப்பிரச்சினை, வீட்டுப் பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புற்றிருக்கும் பாலம் போன்ற விடயங்கள் தொடர்பாக மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள் அத்துடன் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.


இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில்  பலவிதத்தில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்களே அதிகம் இருக்கின்றன அது போன்றதொரு பிரதேசமே இந்த வேப்பவெட்டுவான் பிரதேசம். இங்கு குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் கூடிய விரைவில் கவனம் செலுத்தி என்னால் முடியுமானவரை மக்களுக்கான விடயங்களைப் பூர்த்தி செய்து தருவேன்.

அத்துடன் பெண்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பங்களின் அச்சாணி பெண்கள் இவ்வாறான பிரதேசங்களில் தான் பெண்கள் அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றார்கள். அங்கு அவர்கள் சொல்லொனாத் துயரங்களை அனுபவிக்கின்றார்கள். அது நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் வெளிநாடு செல்வதை விடுத்து குடும்பங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்த வரையில் இப்பிரதேசத்திற்கு ஒரு தொழிற்சாலையை அமைத்து இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் கூடிய விரைவில் முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பாதிப்புற்ற நிலையில் காணப்படும் வேப்பவெட்டுவான் சிறிய பாளத்தினையும் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.