14 பேர் கைது ! சமூக வலைத்தளம் குறித்து குழுவொன்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளது

இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களின் இனவாதம் மதவாதம் பேசுவோர், பரப்புவோரை விஷேட பொலிஸ் குழுவொன்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி இன்று தெரிவித்தார்.
இன்று, ஞாயிற்றுக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை அவர் அறிவித்திருக்கின்றார்.

கைதானவர்களில் பௌத்தர்கள் மட்டுமல்ல, இரு முஸ்லிம்களும், ஒரு தமிழரும் அடங்குகின்றனர்.

ஒரு பௌத்த மதகுரு மற்றும் போலீஸாக பணிபுரிபவர் உட்பட ஏனைய 11 பேரும் பௌத்தர்கள் என அவர் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

''குறித்த 11 பேரில் பலரும் பொதுபல சேனாவுடன் நேரடி தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட மேலும் இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.

இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இதுதொடர்பான விசாரனைக்கு சட்ட மா அதிபதியின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.