நாசீவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பற்சிகிச்சை முகாம்

(ஜெ.ஜெய்ஷிகன்)

ஜனாதிபதியின் அழகிய சிறுவர் உலகம் பேணி பாதுக்காப்பட்ட எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் பேண்தகு பாடசாலை தேசிய நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.


இதன் அடிப்படையில் கல்குடா கல்வி வலயத்தில் பேண்தகு பாடசாலைக்குள் தெரிவு செய்யப்பட்ட நாசீவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பற்சிகிச்சை முகாம் மற்றும் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தலைமையில் நடைபெற்ற பற்சிகிச்சை முகாமில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பற்சிகிச்சை நிபுணர் வைத்தியர்.ஏ.வி.அப்துல் வாஜித் தலைமையிலான வைத்திய குழுவினரால் இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்துடன் இணைந்து வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு காச நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தினை மாணவர்கள் மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் தயாகாந்தன் நிகழ்த்தினார்.

இப்பற்சிகிச்சை முகாமில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஐநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.

பேண்தகு பாடசாலை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் சுகாதாரம், சுற்றாடல், விவசாயம், போதைப் பொருள் ஒழிப்பு, பிள்ளைகளின் உரிமை தொடர்பான ஐந்து வகையான நிகழ்ச்சித் திட்டம் இப்பாடசாலையில் நடைபெற்று வருவதாக பாடசாலை அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தெரிவித்தார்.