அலுவலர்களுக்கு எயிட்ஸ் விழிப்பூட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமை புரியும் பல்வேறு படித்தரங்களிலுள்ள அலுவலர்களுக்கும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எய்ட்ஸ் விழிப்பூட்டல் பிரிவைச் சேர்ந்த வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.




அங்கு உத்தியோகத்தர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டிய வைத்தியர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
எயிட்ஸ் ஒரு ஆட்கொல்லி நோய் என்பதாலும் சமூக அந்தஸ்தஸ்து மற்றும் அவமானம் என்பனவற்றாலும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தங்களை மருத்துவ சிகிச்சைகளுக்குக் கூட வெளியே இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்து வரும் நிலைமையை அவதானிக்கின்றோம்.
ஆயினும், எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடியது என்பதில் மருத்துவ உலகம் முன்னேறியிருக்கின்றது.
நகரப் புறங்களை விட கிராம மக்களுக்கு எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கூடிய மட்டத்தில் சென்று சேர்வதில்லை.

அதனால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை எயிட்ஸ் பரிசோதனை செய்து கொள்வதும் குறைவாகவே நடந்து வருகின்றது.
ஆகவே களப்பணிகளில் எந்நேரமும் மக்களோடு சேவையாற்றும் கிராம சேவையாளர்கள், சமூர்த்தித் திட்ட அலுவலர்கள், சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், பெண்கள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் இந்த விழிப்பூட்டலுக்குப் பொருத்தமானவர்கள் எனக் கருதப்படுகின்றது.

வியாழக்கிழமை 20.07.2017 இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, சுகாதார மேற்பார்வை அதிகாரி எஸ். விஜயகுமார், பொது சுகாதார பரிசோதகர்களான  எம். தயாளன், பி. முருகதாஸ் உட்பட அப்பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சுமார் 80 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.