சுற்றுலாத் துறையானது எமது பிரதேசத்திற்குரிய கலாச்சாரத்தினை பாதிப்புறாத வகையில் கையாளப்பட வேண்டும்...

நாங்கள் எமது காலச்சாரம் பண்பாடுகளை மிகவும் கட்டுக்கோப்போடு கட்டியாள்பவர்கள் என்ற ரீதியில் இந்தச் சுற்றுலாத்துறை என்பது கத்தியைக் கையாளுவது போன்று கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு துறையாக இருக்கின்றது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் பொது அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது நாடு ஆசிய நாடு நாங்கள் எமது காலச்சாரம் பண்பாடுகளை மிகவும் கட்டுக்கோப்போடு கட்டியாள்பவர்கள் என்ற ரீதியில் சுற்றுலாத்துறை என்பது கத்தியைக் கையாளுவது போன்று கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு துறையாக இருக்கின்றது. இங்கு நாங்கள் எதிர்பார்க்கின்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அவர்களது கலாச்சாரத்திற்கு எற்ற விதத்தில் எமது நாட்டை அல்லது எமது பிரதேசத்தை பயன்படுத்தாத வகையிலே எமது கலாச்சாரத்திற்கு இயைந்தவர்களாக எமது கலாச்சார சூழலை அனுபவிக்கக் கூடியவர்களாக அவர்கள் கவனமாக கையாளும் விதத்தில் அந்தச் சுற்றுலாத் துறையை ஆக்கி அளித்திட வேண்டிய மிகப் பெரிய கடினம் இந்தச் சுற்றுலாத்துறையிலே இருக்கின்றது. இங்குள்ள எமது வளங்களை நாங்கள் சரியான முறையில் அவர்களுக்கு காட்ட வேண்டியது மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.

வெறுமனே எமது கடலையும் கடற்கரையோரங்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு எமது சுற்றுலாத்துறை பற்றிச் சிந்திக்காது, எமது பிரசேங்களில் இருக்கின்ற ஏனைய இயற்கை வளங்களை வருகின்ற சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கக் கூடிய விதத்தில் நாங்கள் கையாள வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரையல் அங்கு சுற்றுலா செல்பவர்கள் அதிகம் தரிசிப்பது ஆலயங்களைத் தான் அங்கு அது முக்கிய விடயமாக கருதப்படுகின்றது. ஆனால் இலங்கையைப் பொருத்தவரையில் இன்று வரைக்கும் இந்த கடலும் கடல் சார்ந்த காட்சிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ள விடுதிகளும் தான் சுற்றுலாத் துறையின் அம்சங்களாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் நாங்கள் இதனை மாற்றியமைத்திட முடியும். எங்களுடைய கடற்கரையோரத்தில் இருந்து நாங்கள் உள்ளே செல்லுகின்ற போது இருக்கின்ற அழகான காடுகள், காடுகளை வளப்படுத்துகின்ற ஆறுகள், குன்றுகள் இவை தொடர்பான விடயங்களை நாங்கள் கவனத்திலே எடுத்துக் கொண்டு இருக்கின்ற வளங்களை இயற்கைச் சூழ்நிலைகளை சென்று தரிசிக்கக் கூடிய விதத்திலே எங்களுடைய சுற்றுலாப் பயணிகளை நெறிப்படுத்த முடியும். இது தொடர்பாக நாங்கள் உட்சென்று ஆராய்கின்ற போதுதான் எமது வளம் தொடர்பாக நாங்களே பலவற்றைக் காணக் கூடியதாக இருக்கும்.

எமது பிரதேசத்தில் இருக்கின்ற குடும்பிமலைப் பிரதேசம் எமது சுற்றுலாத்துறையைப் பொருத்தவரையில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்க முடியும் அதே போல் மலைகள், ஆறுகள் போன்றனவும் இருக்கின்றன அவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

எமது பாரம்பரிய கலைகள் அருகிக்கொண்டு வருகின்ற நிலையில் இருக்கின்றது இதனை சுற்றுலாத்துறைக்குள் உள்ளீர்த்து எமது கலைஞர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அதன் மூலம் எமது கலைஞர்களையும் உயர்த்த முடியும் கலைகளையும் வளப்படுத்த முடியும் எமது கண்ணியா வெண்ணீர் ஊற்று தற்போது வேறு கைகளுக்கு மாறியிருக்கின்றது. அதனை அந்தச் சுற்றுலாத் துறைக்குள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களை சுற்றுலாத்துறையில் உள்ளடக்கம் எமது சுற்றுலாத்துறையை எமது கலாச்சாரம் பேணப்படும் வகையில் விருத்தி செய்திட முடியும் என்று தெரிவித்தார்.