சிப்லி பாறூக் இனவாதத்தை தூண்டுகிறார்; முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிசான் கண்டனம்



(அஸ்லம் எஸ்.மௌலானா)

தமது சுய அரசியல் லாபங்களுக்காக இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கின்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர், சிப்லி பாறூக் போன்றோருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"தமிழ் மக்களுடைய கையில் நிருவாகம் மற்றும் அரசியல் அதிகாரமும் போகுமாகவிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் சமூகம் ஒர் அடிமை சமூகமாக மாறிவிடுமென" கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்துக்கள் பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதனை முஸ்லீம் சமூகத்தின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அதேவேளை கிழக்கு மாகாண சகோதர தமிழ் சமூகம் இவ்வாறானவர்களின் கருத்துக்களை பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அரசியலில் அனுபமில்லாத காரணத்தால் சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களை இவ்வாறனவர்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றார்கள்.

தேர்தல் காலம் நெருங்குகின்ற சந்தர்ப்பங்களில் இனவாதக் கருத்துக்கள், பிரதேச வாதக்கருத்துக்களை தோற்றுவிப்பதன் ஊடாக தமது அரசியல் அபிலாசைகளையும் தமது அரசியல் இருப்புப்பக்களையும் தக்கவைத்துக்கொள்வதற்கு இவ்வாறான உத்திகளை கையாண்டு வருகின்றார்கள். இவர்களின் அரசியலுக்கு மக்கள் குறுகிய காலத்திற்குள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். சகோதர தமிழ் சமூகம் இவ்வாறனவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.

சகோதர இனங்களுடன் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டுமென இஸ்லாம் மார்க்கம் மிகவும் தெளிவாக வலியுறுத்தி வருகின்றது. முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது வாழ்க்கையில் அழகிய முன்மாதிரிகளை எமக்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

30 வருடகால யுத்தத்தின் பிற்பாடு எமது நாட்டின் தற்போது இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வளர்ந்து கொண்டு வருகின்றது. அரசு பல நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இனவாத, பிரதேச வாத கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல் வாதிகளுக்கு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள், சட்டதிட்டங்கள், பொறிமுறைகள் எம்மத்தியில் இல்லாமல் இருக்கின்றன" என ஏ.எல்.எம்.றிசான் சுட்டிக்காட்டியுள்ளார்.