கல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்டத்தை உருவாக்க முஸ்லிம் காங்கிறஸ் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்டத்தை உருவாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை அல்-புஸ்ரா ஆழ்கடல் மீனவர் சங்கத்திற்கு 25 இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடதத்தின் திறப்பு விழா சங்கத்தின் தலைவர் ஐ.எல்.மன்சூர் தலைமையில் (17.08.2017) நடைபெற்றது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

20 வது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் காங்கிறஸ் கட்சி பெறுப்புடன் செயற்பட்டு வருகின்றது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் 1500 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கல்முனை சந்தாங் கேணி மைதானம் இலங்கையின் தேசிய மைதானங்களின் வரிசையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. எமது தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் அயராத முயற்ச்சியினால் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் வெற்றியளித்துள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கடற்கரை பிரதான வீதி காத்தான் குடி வீதிகளை போண்று அபிவிருத்தி செய்யப்பட வில்லை என பலர் கூறுகின்றனர். கடற்கரை வீதியை அபிவிருத்தி செய்வதாக இலுந்தால் நாம் எப்போதோ செய்திருப்போம். ஆனால் இங்கு தினமும் கஸ்டப் படுகின்ற ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்து வந்தோம்.

இன்று இந்த கடற்கரை வீதியின் அபிவிருத்திக்கான கோசம் பரவலாக முன்வைக்கப்படுகின்றது அதனையும் எதிர்காலத்தில் செய்யவேண்டியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய ரீதியில்  நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு வரையப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்டத்தை உருவாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.  என்றார்.

இந்த கட்டிட திறப்பு விழாவில் அம்பாரை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகுகள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.ஹமீட், சட்டத்தரணி ஏ. றோசான் அக்தர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்
எம்.எஸ்.நிஷார் ஆகியோரும் உரையாற்றினார்கள். மீனவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். சங்கத்தினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.