அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையை வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்போது விசேட உரையாற்றிக்கொண்டுள்ள ரவி கருணாநாயக்க தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தையும், ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் நோக்கிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நேற்று சந்தித்து பேசியிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் 1 மணித்தியாலம் தொடர்ந்திருந்தது.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையதாக தெரிவித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என, பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதியிடம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினரால் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டிருந்தது.

இது தொடர்பில், இன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், 'ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்' என, ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்