Thursday, August 10, 2017

வட அயர்லாந்தின் சமாதானத்திற்கு வழிவிட்டதான குட் பிறைடே (Good Friday) ஒப்பந்தத்தின் முன்மாதிரிகளை எமது அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

ads

எமது நாட்டில் அரசியற் தலைவர்கள் மக்களின் கோரிக்கைகளை ஏற்று மிகப் பெரிய பிரயத்தனத்தோடு தீர்வுகளை எட்ட முற்படுகின்ற போது பெரும்பான்மை இன மதத் தலைவர்களின் தலையீடு காரணமாக அவற்றைச் செயற்படுத்த முடியாமல் போயுள்ளது. இப்போதும் அத்தகு நிலைமைகள் ஏற்படுமோ என்கின்ற அச்சம் எழுந்திருக்கின்றது.

வட அயர்லாந்தின் சமாதானத்திற்கு வழிவிட்டதான குட் பிறைடே (Good Friday) ஒப்பந்தத்தின் முன்மாதிரிகளை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இல்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கி ஜனநாயகத்திற்கான வெஸ்ட் மினிஸ்டர் மன்றத்தினுடைய குழுவினருக்கும் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்குமிடையில் இடம்பெற்ற நல்லிணக்கம் தொடர்பில் வட அயர்லாந்தினுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் சம்மந்தமான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட அயர்லாந்தை நினைக்கும் போது என்னுடைய இளமைக் காலங்களில் நான் வாசித்து அறிந்துகொண்ட விடுதலைப் போராளிகள் டெரன்ஸ் மகஸ்வினி மற்றும் மைக்கல் கொலின் என்போரின் நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றது. எனவே இலங்கையின் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள், அரசியற் கைதிகளை விடுவித்தல், ஆக்கிரமக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் அரசியற் தீர்வில் மதத் தலைவர்களின் தலையீடு பேன்ற எமது நாட்டின் நிலைமைகள் தொடர்பாக ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

நல்லிணக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மற்றும் எமது எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கும் செயற்பாடு பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இங்கு அதிகாரப் பகிர்வு தொடர்பாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அக்கறையோடு செயற்பட்டு வருகின்றது. எங்களைப் பொருத்த வரையில் அதிகாரங்கள் பிராந்தியங்களுக்கு பங்கீடு செய்யப்பட வேண்டும். அந்த அதிகாரங்கள் மத்திய நிரல், மாகாண நிரல், உள்ளுராட்சிமன்ற நிரல்கள் என்ற வகையில் நிரல்ப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் கையகப்படுத்தப்படலாகாது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சில நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படுகின்றன இது வெறுமனே உறவுகளை இழந்த மக்களின் கண்ணீரைத் துடைத்துவிடும் அளவிலானதாக மட்டும் இருக்காமல் சர்வதேச நியமங்கள் கூறுகின்ற பரிந்துரைகள் ஊடாக அமைய வேண்டும்.

அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டு கைதுசெய்யப்பட்டோர் அனைவரும் அரசியற் கைதிகள் என்று அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக கொலை கொள்ளை செய்து தாக்குதல் நடத்தியவர்கள் அல்ல. எனவே இங்கும் அரசியற் கைதிகள் தொடர்பில் கையாளப்படுகின்ற சர்வதேச நியமங்கள் கைடைப்பிடிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். அரச காணிகள் தொடர்பில் வடக்கு கிழக்கு பிராந்தியத்திற்கு ஏற்ற வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் மாத்திரம் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இந்த வகையிலேயே வட அயர்லாந்தின் சமாதானத்திற்கு வழிவிட்டதான குட் பிறைடே (புழழன குசனையல) ஒப்பந்தத்தின் முன்மாதிரிகளை இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்து விளக்க வேண்டும்.

வட அயர்லாந்தின் இன விடுதலைப் புரட்சிக்கு காரணமாக இருந்த விடயம் புரட்டஸ்தாந்து பெரும்பான்மை மதத்தவருக்கும், கத்தோலிக்க சிறுபான்மை மதத்தவருக்கும் இடையேயான பிணக்குகள் தான் அந்த அடிப்படையில் மதத் தலைவர்கள் இவ்விடயங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்கின்ற விடயத்தை எமது அரசோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் எமது நாட்டில் அரசியற் தலைவர்கள் மக்களின் கோரிக்கைகளை ஏற்று மிகப் பெரிய பிரயத்தனத்தோடு தீர்வுகளை எட்ட முற்படுகின்ற போது எமது நாட்டின் பெரும்பான்மை இன மதத் தலைவர்களின் தலையீடு காரணமாக அவற்றைச் செயற்படுத்த முடியாமல் போயுள்ளது. இப்போதும் அத்தகு நிலைமைகள் ஏற்படுமோ என்கின்ற அச்சம் எழுந்திருக்கின்றது. எனவே இவ்விடயங்களில் யதார்த்த பூர்வமான ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம் என்று குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

வட அயர்லாந்தின் சமாதானத்திற்கு வழிவிட்டதான குட் பிறைடே (Good Friday) ஒப்பந்தத்தின் முன்மாதிரிகளை எமது அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் Rating: 4.5 Diposkan Oleh: - Office -
 

Top