கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு


ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 10000 ஏக்கர்களுக்கு மேல் விவசாய நீர்ப்பாசன செயற்பாட்டிற்கு பயன்படுகின்ற கிரான்புல்சேனை அணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன் மற்றும் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளதோடு கிழக்கு மாகாண முதலமைச்சர், பாராளுமன்றப் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் செங்கலடி மத்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அணைக்கட்டு அமைக்கப்படவுள்ள இடத்தினைப் பார்வையிடுவதற்காகவும், நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் மாகாண அமைச்சர் உட்பட அதிகாரிகள் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பாரிய முயற்சியின் பலனாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த கிரான் புல்சேனை அணைக்கட்டு நிரந்தரமாக அமைத்தல் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மத்திய அமைச்சோடு கலந்துரையாடி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் அதன் கள நிலவரங்களை ஆராய்வதற்கான மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.துரைசிங்கம் தலைமையிலான குழுவினருடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி செங்கலடி உறுகாமம் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வில் இவ்வணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக அமைப்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டு இது தொடர்பில் கள ஆய்வுச் செயற்பாடும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவ்வணைக்கட்டு நிர்மானப்பணிகள் செப்டெம்பர் மாதம் அளவில் ஆரம்பிக்கப்படும் என மாகாண அமைச்சர் உட்பட நிர்வாகிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து எதிர்வரும் 24ம் திகதி இவ்வணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

1957ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிப்புற்ற இவ்வணைக்கட்டானது அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏதுவான நிலையில் இல்லாமல் வருடா வருடம் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் மண் கட்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இது நிரந்தர அணைக்கட்டாக இல்லாமையினால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியே வந்தனர். தற்போது இது நிரந்தரமாக அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 10000 ஏக்கர்களுக்கு மேல் விவசாயச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்

மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இவ்வணைக்கட்டு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.