காணாமல் போனோர் அலுவலகத்தை துரிதகதியில் நிறுவ வேண்டும்: இலங்கைக்கு ஐ.நா அழுத்தம்

இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகத்தை துரிதகதியில் நிறுவ வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்-உசைன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை நம்பிக்கை தரும் விதத்தில் தமது செயற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


குறிப்பாக காணாமல் போனோர் விடயத்திலும், பொது மக்களின் காணி விடுவிப்பிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 இன் கீழ் ஒன்று என்ற பரிந்துரைகளை நடைமுறைபடுத்த இலங்கை கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை மேற்க கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.