காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியில் தெருவிளக்கு பொருத்தப்படவேண்டும்!

(காரைதீவு நிருபர் சகா)

கல்முனை – அம்பாறை பிரதான வீதியிலுள்ள காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதி இரவில் கும்மிருட்டாகக் காட்சியளிக்கின்றது. வாகனங்கள் துவிச்சக்கரவண்டிகள் பாதசாரிகள் செல்வது சிரமமாகவிருக்கின்றன. எனவே இவ்வீதிக்கு தெருவிளக்குகள் பொருத்தப்படவேண்டும்.சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறான தீர்மானமொன்று காரைதீவுப்பிரதேச சிவில் சமுக அமைப்புகளின் சம்மேளனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டம் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காரைதீவுப்பிரதேச சிவில் சமுக அமைப்புகளின்    சம்மேளனத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
பிரதேசசெயலக ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.றாபி செயலாளர் பி.ஸ்ரீகாந்த் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

சிவில் சமுகஅமைப்புகளினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்றிட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
காரைதீலுள்ள பல வீதிகள் இன்னும் செப்பனிடப்படாமலுள்ளன. குறிப்பாக வடபுற எல்லையிலுள்ள சித்தானைக்குட்டிவீதி குன்றும்குழியுமாக போக்குவரத்திற்கு பொருத்தமில்லாமல் உள்ளது. அவ்வீதியிலுள்ள பாலத்தில் தெருவிளக்கு இல்லாமையினால் பல சமுகசீர்கேடுகள் நிகழ்ந்துவருகின்றன. எனவே அவ்வீதி செப்பனிடப்படவேண்டும். அத்தோடு தெருவிளக்கும் பொருத்தப்படவேண்டும் என மாளிகைக்காடு பிரதிநிதி சாஹிர் வேண்டுகோள்விடுத்தார்.

பதிலளித்த தலைவர் சகா இவ்வீதி தொடர்பாக பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பல தடவைகள் நான் எடுத்துக்கூறியுள்ளேன். அதனைச்செய்வதாகக்கூறினர். இன்னும் நடக்கவில்லை.
காரைதீவுப்பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் கடந்த 6 மாதங்களாக நடக்கவில்லை. அடுத்தகூட்டத்தில் இப்பிரச்சினையை எத்திவைப்பதாகக்கூறினார்.

மாவடிப்பள்ளிக்கான தபாலகம் சனநடமாட்டம் குறைந்த எல்லைப்பகுதியிலமைந்துள்ளது. அதேவேளை அரச கட்டடம் ஒன்று பிரதானவீதியில் சும்மா கிடக்கிறது. எனவே மக்களுக்குத் தேவையான தபாலகத்தை பிரதானவீதியிலிருக்கும் அந்தக்கட்டடத்திற்கு மாற்றவேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்திற்கு அமைச்சர் மனோகணேசனை இங்கு பிரதம அதிதியாக வரவழைக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.