வாகனேரி குளத்துமடு மக்களுக்கு பொதுக்கிணறு கையளிப்பு!



மட்டக்களப்பு வாகனேரில் பொதுக்கிணறு திறப்பு விழாவும் மக்கள் பாவனைக்கு குடிநீர் வசதி கையளிக்கும் நிகழ்வும் நேற்று (10) இடம்பெற்றது.

மேலும் வாகனேரி குளத்துமடு கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினையான குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட்ட ஏனைய மாற்றுத்திறனாளிகளும் இக்கிராமத்தில் மிகவும் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலும் கோடை காலங்களில் குடிநீர் பெற்றுக் கொள்வதிலும் மற்றும் ஏனைய நீர் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பெரும் சிரமத்தினை நாளாந்தம் அனுபவித்து வந்தனர்.

அத்தோடு இங்கு குடிநீரை பெறுவதற்கு மக்கள் மிக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்பட்டது அவ்வாறு பயணம் செய்து பெறும் நீரும் சுகாதாரமான நிலையில் உள்ளதா என்பதும் கேள்வி குறியாக இருந்தது.

இருந்தும் அரசாங்கத்தால் குறித்த கிராம மக்களுக்கு வெளசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயம்.

ஆனாலும் போதிய அளவில் ஏனைய நீர் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள   இங்குள்ள மக்கள் நாளாந்தம் பல பிரச்சினைகளை அனுபவித்து வந்த நேரத்தில் இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் யுத்த வடுக்களால் அங்கங்களை இழந்து வாழும் மாற்றுத்திறனாளிகள்  போன்றோரின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் நம்பிக்கை ஒளி (இலண்டன்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பாரிய பொதுக்கிணறு அமைத்து இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த திட்டமானது யுத்தத்தால் இரு கண்களையும் இழந்த க.மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் காணியில் இப்பொது கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது.

இதனால் இக்கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் நன்மையினை பெறமுடிம் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு நம்பிக்கை ஒளி நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ் பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது இதில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள்  உத்தியோகத்தர்  எஸ். அருண்மொழி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.