அதிகாரத்தை கையில் எடுத்து ஆட்டம் போடுபவர்கள் எல்லோரும் வரலாற்றின் பல பக்கங்களை மூடியே வைத்திருக்கின்றனர். விரிவுரையாளர் க.மோகனதாசன் தெரிவிப்பு

(செ.துஜியந்தன்)

கவிதை மனுக்குலத்தின் மனச்சாட்சி, அது அநீதிக்கு எதிராகக்குரல் எழுப்புகிறது.

அக்கிரமத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறது. நிர்க்கதியானவர்களின் கந்தல் துணியினால் தலை துவட்டுகிறவர்கள், அடக்கப்பட்டவர்களின் கண்ணீரை அருந்தி மகிழ்பவர்கள், அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டம் போடுபவர்கள் எல்லோரும் வரலாற்றின் பல பக்கங்களை மூடியே வைத்திருக்கின்றனர். ஏனென்றால் சம்பவங்களின் கைகளால் அவர்கள் சுட்டிக்காட்டப்படுவர் என அவர்களுக்குத் தெரியும்.

அதற்காக சமூகத்தின் காவலர்கள் சும்மா இருப்பார்களா? அதிகாரத்தின் கனத்த சுவர்களில் வேர்விட்டுப்படரும் அரசமரம் இவர்கள். அதிகாரத்தை விரிசல் காணச் செய்து விட்டு சமூகத்திற்கு பசுமையினைப்பரிசளிப்பவர்கள். இந்தப்பின்னணியிலேயே மட்டுநகர் கமல்தாசும் அவரது புரட்டப்படாத பக்கங்களும் நமக்கு அறிமுகமாகின்றன.

இவ்வாறு நூல் நயவுரையாற்றிய  கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் தெரிவித்தார். மட்டு நகர் கமல்தாஸின் புரட்டப்படாத பக்கங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா கொக்கட்டீச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் கவிஞர் மேரா தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொண்டார். நூல் நயவுரையினை விரிவுரையாளர் க.மோகனதாசன் நிகழ்த்தினார்.

அங்கு நயவுரை ஆற்றிய விரிவுரையாளர் க.மோகனதாஸ் மேலும் தெரிவிக்கையில்
 'வன விலங்கென்று சுற்றி வளைக்கப்பட்ட
முட்கம்பிக்குள் முடக்கப்பட்டு
வாழும் ஓர் இனம்
வெளிநாட்டு மாந்தர்கள்;
வந்து வந்து போகின்றார்கள்
சுற்றுலாப்பயணிகளாக
பல புகைப்படங்களுடனும்
சிலப்பக்கக்குறிப்புக்களுடனும்
வருடங்கள் கடந்து விட்டன
இன்னும் புரட்டப்படவில்லை
அந்தச்சில பக்கங்கள்...'
என்ற எமது மொத்தத்திற்குமான மட்டுநகர் கமல்தாஸின் ஏக்கப்பெருமூச்சுக்களுடன்... மட்டுநகர் கமல்தாஸின் 'புரட்டப்படாத பக்கங்கள்' கவிதை நூலைப்புரட்டுகிறேன்.

இந்தக்கவிதைநூல் என்னை இருந்த இடத்தில் இருக்கச் செய்ததா? அல்லது சிறகு கட்டிப்பறக்கச்செய்ததா? அல்லது வேதனையில் பாய்விரித்துத்தந்ததா? எனது அனுபவங்களைப்பதிவு செய்கிறேன், என் உணர்வுத்தளத்தில் நின்று. நான் ரசித்தவற்றுள் ஒரு கையள்ளித் தருகின்றேன், நீங்களும் சுவைத்துப்பார்க்க. இவரது கவிதையில் மண் மணக்கிறது, வீர ரத்தம் பீச்சிட்டு எம் முகங்களையெல்லாம் சிவப்பாக்குகின்றன. காரணம் அவர் அந்தரத்தில் நிற்கவில்லை தன் மண்ணில் இரு கால்களையும் அழுத்தமாக ஊன்றி நிற்கிறார். ஏல்லோருக்குமான அனுபங்களின்  திரட்சியிலிருந்து, கடந்த கால கண்ணீரின் கதைகளிலிருந்து சிலவற்றை தமது பாசையில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். தன்னுணர்வும் சமூக அக்கறையும் அவரது கவிதைகளுக்கான உள்ளீடுகளாகின்றன.

'என்னைப்பற்றி' எனும் கவிதையினூடாக அவர் தன்னை அறிமுகம் செய்கிறார். பொதுமையின் வெளிப்படைப்படையிலிருந்து எல்லோருக்குமாகப்புன்னகைப்பவனாகவும், தனது கனவுக்குக்கூட சமூகப் பாசத்தைத்தடவித்தடவி  சரிபார்ப்பவனாகவும் தன்னை அடையாளப்படுத்துகின்றார்.
'கனவிலே ஊரழிந்தாலும்
நினைவிலெழுந்து அழுபவன்...' என்பதும்
'என்னோர்களின் மனக்குமுறல்களை
எழுத்துக்களாக்கி எடுத்துரைப்பவன்...'
என்பதிலிருந்தும் புரிகிறது இவர் யாரென்று.
'...கலப்பை தூக்கிய உழவனாக
எழுதுகோல் ஏந்திய
உழவன் நான்...' என்பதும்
'...அகங்காரம் கொண்டவனிடம்
எனது அசையாத மார்பு
நிமிர்ந்தே நிற்கும்...'
என்பதும் ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக்கூடிய ஓர்மக்குரலாக எம் காதுகளில் ஒலிக்கிறது. தெருவெங்கும் எமது தாய்மாரின் ஒப்பாரி கேட்கும் போது எம்மால் எப்படி தேசிய கீதம் பாட முடியும். உடுப்பதற்கு சட்டையே இல்லாத போது இவர்கள் தரும் தேசியக்கொடியை எங்கே குத்த முடியும். எனும் தொனியில் 'எங்களுக்காகவும் பேசுங்கள்' எனும் கவிதையில்,
'தோளில் சுமந்து
பள்ளிக்குக்கொண்டுவிடும் அப்பாவுமில்லை
கொடியேற்றிக்கொண்டாடினார்கள்'
என அவர் கூறுவது இழவு வீட்டில் எப்படியப்பா உங்களால் இலை விரிக்க முடிகிறது என அதிகாரத்தை நோக்கிக்கேள்வி கேட்பதாவே எமக்குப்படுகிறது. 'என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய் நின்னை எவரும் நிறுத்தடா என்பதிலர். நெட்டை மரங்களென நின்று புலம்பினார்' என்ற எமது பாஞ்சாலிகளின் அழுகுரல் கேட்ட போதெல்லாம் அண்டை நாடுகளும் நெட்டை மரங்களென நின்று வேடிக்கை பார்த்தன.
'மானமென்ற ஒன்றுக்காய்
மடிந்த பெண்ணின் உடலை நிர்வாணப்படுத்தி
புகைப்படங்கள் எடுத்துப்புன்னகைத்தார்கள்
உயிர் தப்பி வந்த பெண்ணை
தெரியாத பாசையில் ஏசினார்கள்
அடித்தார்கள் உதைத்தார்கள்...'
என அவலமுற்ற பெண்களுக்காய் தானும் அழுது எம்மையும் அழவைக்கிறார் தமது கவிதைகளில், தொன்று தொட்டுக்கட்டிக்காத்த பண்பாடுகளையும் மண்ணின் பெருமையினையும் உழவின் மேன்மையினையும்
'பச்சை வயல்களும்
 பண்பாடாய் திகழும்
 அரிவாள்பட்ட வயல்களும்
 இரேகைச்சித்திரமாய் புலரும்..' என ஆரம்பித்து
 'உழவன் மகன் ஊதாரியானால்
 ஊரே மயானமாகும்
 ஊதாரிகளும் உழவனானால்
 ஊரே ஓரழகாகும்'
என சுழன்றும் ஏர்ப்பின்னது அதனால் உழன்றும் உழவின் தலையாய பெருமையினை தனது மண் வாசனையூடே பதிவு செய்கிறார். அவர் மனசு அங்குதான் ஒட்டிக்கிடக்கிறது. வெளிநாட்டு வாழ்க்கையின் வெறுமையினை 'வெளிநாட்டுக்காரன்' என்ற கவிதையினூடாக வேதனைக்கோடிட்டுக்காட்டுகின்றார்.
'சம்பளம் எடுத்தால் கை நிறையக்காசு
ஓரிரு நாள் கடந்த பின்
வேறு ஒருவரின காசு...' எனத்தொடங்கிய வேதனைப்பயணம்
'வெளிநாட்டுக்காரரென்று
எமக்கு வீட்டுத்திட்டம் பறிப்பு
இந்நாட்டில் நமக்கு ஏது மதிப்பு' எனப்பயணித்து
'விமான நிலையத்தில்
வெளிநாடு என கலகலக்கும்
விமானப்பயணம் முடிந்திறங்க
வேதனைக்காற்றொன்று
நமக்காக வீசும்'
என வெளிநாட்டுப்போலி வாழ்வின் வேதனையினைக்கவிதையாக்கியிருக்கிறார்.
'யார் அழுவார்' என்ற கவிதையில், முள்ளி வாய்க்காலில் சொல்லியள ஆளின்றி கொத்துக்கொத்தாய் செத்துப்போன உறவுகளை எண்ணி கண்ணீரால் கதறுகிறார்,
'ஓர் பிணம் விழுந்தால்
ஊரெல்லாம் ஒப்பாரிகள்
ஊரெல்லாம் பிணம் விழுந்தால்
யாரெல்லாம் அழுவார்கள்?
என அவர் கேட்கும் கேள்வி அந்த அந்தகாரப்பொழுதின் ஒப்பாரியாய் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அவமதிக்கப்பட்ட பெண்ணின் தகிக்கும் துன்பியல் காவியமாக இந்தச்சமூகம் ஒவ்வொரு நாளும் திரிக்கும் தூக்குக்கயிற்றில் தினம்தினம் இறப்பவளாக குழந்தையின்றித்தவிக்கும் பெண் வாழ்கிறாள். அந்த வாழ்வின் ரணங்களை 'குழந்தை வரம்' என்ற கவிதையில்
'தங்கையின் பிள்ளைகளை
புதினங்களுக்குக்கூட்டிப்போனால் உன்பிள்ளையா?
என்று வினாவ
மெதுவாய் இறந்து விடுகிறேன்...'
என்னும் அவளது உணர்வை, வேறெங்கோ கொண்டு போய் இறுதியில் எமக்கு அதிர்ச்சியளிக்கிறார். ஆம்
'கோயில் குளம் போகும் போதெல்லாம்
நேர்த்திக்கடனும் கல்லும் வைத்து விடுகிறேன்
உடல் நலம் குன்றிப்போய்க்கிடக்கும்
என் கணவர் குணமடைய வேண்டுமென்று...' உண்மையில் இவளன்றோ வீரப்பெண்.

நமது வலிகளையெல்லாம் நமக்குப்பிடித்மானவைகளிடம் சொல்லியழும் இலக்கியமரபு தமிழுக்குண்டு. நெய்தலின் இரங்கற்கவிகள், இதற்குச்சிறந்த உதாரணம். கமல்தாசும் கொக்கட்டிச்சோலை சிவனை முன்னிலைப்படுத்துகின்றார்.
'வரலாற்று நாயகனாய் வந்தமர்ந்தாய்
பாற்குடமேந்தி பக்தர் வேண்டி நின்று
களமாடிய வரமேதும் கிடைக்கலையே ஈஸ்வரனே
தடம் புரளாது தேரோடி வருவாயே
தளராத தாகமதை தீர்த்திட வாருமையா
மண்முனைத் தேன்கடலில் தீர்த்தமாடுவாய்
அங்கே அழும் ஓசை
கேட்க வில்லையா எந்தன் இறைவா?...'
என்று தமது இரங்கல் கவியின் மூலம் இறைவனை நோக்கித்தம் கரத்தினை குவிக்கின்றார்.

எங்காவது ஒரு அரசியல்வாதி வரும்போது அந்த வீதி செப்பனிடப்படும். மின்விளக்குகள் பிரகாசிக்கும். ஒரு துண்டுப்பாலைவனம் சோலைவனமாகும். காட்சிக்கு வைத்திருக்கும் குடிசைகளும் அதன் மனிதர்களும் அன்றைய தினம் அலங்கரிக்கப்படுவர். இந்த காட்சியை 'அபிவிருத்தி' எனும் கவிதையினூடாக எம் கண்முன் சாட்சியாக்குகிறார்,
'மின் விளக்குகள் பிரகாசிக்கின்றன
எங்கள் குடிசைகளில்
குடிசைக்குள் அடைந்த இருள்மேகம்
படர்ந்திருப்பதை எவராலும் அவதானிக்க முடியாது...'
என குடிசையின் எதிரில் நின்று கொண்டு குடிசைபற்றி இருட்டாக பாடிக்கொண்டிருக்கும் தெருவிளக்கைப் போல அவர்கள் ஊற்றிய ஏமாற்றத்தின் எண்ணைப்பிசுபிசுப்பில் நின்று கொண்டு எம்மோடு பேசுகிறார். யதார்த்தத்தின் வலிகளை எம்மீதும் அள்ளிப்பூசுகின்றார். சில யதார்த்தத்தின் முரண் நகையினையும் தமது கவிகளில் பதிவு செய்திருக்கிறார்.
'விதைகளைப் புதைத்த விவசாயி
மழையை வேண்டுகிறான்
விறகு விற்கும் தொழிலாளி
மரங்களை வெட்டி வெயிலில் போடுகிறான்'
இயங்கையின் நியதி கூட ஏழைகளுக்குச்சார்பாக இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது. இடி விழுந்தாலும் அது ஏழையின் இலக்கறிச்சட்டிகளைத்தான் தான் பதம்பார்க்கின்றன. கடந்தகால யுத்தமும் ஏழைகளை இன்னும் ஓட்டாண்டி ஆக்கியது. உண்மையில் சில பக்கங்களை நாம் பார்க்காமலேயே கடந்து விடுகிறோம். இவையும் புரட்டப்படாத பக்கங்களே. அமைதியாக வேதனையினைக் கிளறும் படிமமாக 'வறுமையின் கொடுமை' எனும் கவிதையில்
'வெற்றுப்பாத்திரமென்றறிந்தும்
பசி மீண்டுமொருமுறை
திறந்து பார்க்கும்'
இங்கு கை திறக்கவில்லை. பசிதான் இவர்கையைப்பிடித்து இழுத்து வந்து இவரைத் திறக்க வைத்திருக்கிறது. 'அழாதே அம்மா' எனும் கவிதை எம்மோடு இன்னொரு புறநானூறுபேசுகிறது,
'அழாதே அம்மா
உன்னிடம் யாரோ பொய்யுரைத்திறார்கள்.
நான் மரணித்து விட்டேனெ;று
மரண தூது தாங்கி வந்த மடலைப்பிரித்துப்பார்
உன் பிள்ளை விழவில்லை
புதிதாய் பிறந்து வருவான் என்றல்லவா
அதில் எழுதியிருக்கிறது'
எமக்கு மெய் சிலிர்க்கிறது எங்கெல்லாமோ அசரீரி கேட்கிறது. 'கனவுகள் மெய்ப்பட வேண்டும்' எனும் கவிதை புதுவிதமாக சாட்டையை கையில் எடுக்கிறது. 
'பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாய்
எம் தாய் நாடு இருக்க வேண்டும்
உண்டியல் இல்லாத
கோயில்கள் இருக்க வேண்டும்'
யாசகம் கேட்பது ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து மாற்றத்தை ஆரம்பிப்போம் என இவர் கூறுகின்றார். காதல் கவிகளிலும் அற்புதமான காட்சிப்படிமங்களை எமக்குக்காட்சியாக்குகின்றார்,
'உன் காலடியில் எனை சமாதியாக்கு
சமாதியில் ஒரு ஜன்னல் வைத்து
இமை மூடாமல் பார்த்திருப்பேன்' என்று.
இரு இசைத்தட்டில் ஒரு பாடல் இசைக்க முடியுமா? ஆம் இவரது அதிசயமான காதல் மொழியின் ஒப்புதல் இரு இசைத்தட்டில் முழங்குவதாக அறிவிக்கின்றார். தனது காதலியோடு பேசுவதற்கென்று இதயத்தில் மேசை போட்டு கதிரை போட்டு இடம் தயார்பண்ணி வைத்திருக்கிறார். நித்தமும் உன்னைப்பார்க்க ஏங்கும் மனது எனும் கவிதையில்
'இதயத்தில் எத்தனை இடைவெளிகள்
உன்னோடு பேசுவதற்கு'
என்று இவர் உறுதியாயிருக்கிறார். மேலும் கூறுகிறார்,
 'காலை வணக்கம்
தகவல் பெட்டிக்குள் காத்துக்கிடக்கும்
தினசரி எனது
தகவல் பிரிவுச்சித்திர வதைகளை
மூடி மறைத்தபடி
தினம் தினம் தொடரும்'
என காதல் வாழ்விலும் வெளிநாட்டு வாழ்வின் வெறுமையினை விபரிக்கிறார்.

அந்தக்கால நினைவுத் தடங்கள் எனும் கவிதையில்
'மழைக்குக்குடை பிடித்ததில்லை
வெயிலுக்கும் நிழலில் நின்றதில்லை
புழுதிக்கும் மூக்குப்பிடித்ததில்லை
சகதியையும் எட்டிக்கடந்ததில்லை
சாதியையும் பார்த்ததில்லை
சம்பிரதாயமும் கேட்டதில்லை
எல்லாமே எங்களுக்கு ஒன்றுதான்
இலவசக் காற்சட்டை இடுப்பில் கிடக்கும்
அரைஞாண் கயிற்றில் ஊசி கிடக்கும்
ஆசையெல்லாம் அடுக்கிக்கிடக்கும்
ஆனந்தமான காலம்'
எனும் வார்த்தைகள் எமது வசந்தகால ஞாபங்களையும் தடவிப்பார்க்க வைக்கிறது.

இறுதியாக 'தேடல் தொடர்வோம்' என முடிக்கிறார்.
'இனத்தின் மீது அலாதியான காதல்...
அந்தக்காதலை எப்படிச் சொல்வேன் ஏனென்றால்
'இதயவனத்தில் ஒப்பாரிகள்
இன்னல் நிறைந்த வார்த்தைகளாகி
இடைவிடாது உதிர்ந்து கொண்டிருக்கின்றன...' என்கிறார்.
புத்தகத்தை வாசித்து முடித்ததும் இருதயத்தின் எங்கோ ஒரு மூலையில் வலியெடுக்கிறது. எம்மையறியாது பெருமூச்சுக்கள் பல எம் காலடியில் வந்து விழுகின்றன. இந்த நெருப்பும் வலியும் எமது தலைமுறைகளுக்குப் பதிவுகளாகின்றன. உண்மையான ஒரு சமூகத்தின் பாடகனாலேயே அடுத்த தலைமுறைகளுக்கான அக்கினிக்குஞ்சுகளைப்பிரசவிக்க முடியும். என்றார்.