மட்டக்களப்பில் சுற்றிவளைப்பின் போது பாவனைக்கு உதவாத வெங்காயம் பறிமுதல்!

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத வெங்காயம் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் திடீர் சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குற்பட்ட புதூர் விமான நிலைய சந்தியில் தீபாவளி பண்டிகையினையொட்டி நேற்று  (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பை, புளியந்தீவு சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சுமார் 800 கிலோ கிராம் வெங்காயம் மற்றும் அதனை விற்பதற்காக பயன்படுத்திய வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், வெங்காய வியாபாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.