புலிச்சுறாவை பிடித்தவர்கள் கடற்படையால் கைது

அழிவடைந்து வரும் அரியவகை சுறாவான புலிச்சுறாவை பிடித்தவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 170 கிலோகிராம் எடையுடைய குறித்த சுறாமீனை, வாழைச்சேனை பகுதியில் மூன்று மீனவர்கள் இணைந்து நேற்று (புதன்கிழமை) பிடித்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக, மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் ருக்ஷான் குறூஸ் தெரிவித்தார்.

இவர்களை கைதுசெய்த கடற்படையினர், மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒவ்வொருவரும் தலா முப்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர். அத்தோடு, இவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த மீனினம் அழிவடைந்து வருவதால் அதனை பிடிப்பதை கடற்றொழில் திணைக்களம் தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது