பிரபாகரனின் உடலைப் பார்த்து ராகுல்காந்தி அடைந்த வேதனை

குஜராத்தில் தொழிலதிபர்களுடனான ஆலோசனையின் போது ராகுல் காந்தியிடம் சங்கடமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலைப் பார்த்த போது எப்படி இருந்தது" என்று ராகுல்காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்வியால் உருகிப் போனார் அவர்.

"பிரபாகரனின் உடலை படத்தில் பார்த்த போது வேதனை அடைந்தேன்" என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்றுமுன்தினம் இரவு அவர் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து ராகுல்காந்தி விரிவாகப் பேசினார். வேலைவாய்ப்பு இல்லாத கோபத்தில் மக்கள் இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை பாஜக அரசுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற காரணத்திற்காகவே மக்கள் புறம் தள்ளினர். ஆனால் தற்போதைய நிலைமையைப் பார்க்கும் போது காங்கிரஸ் ஆட்சியிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று ராகுல் பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ராகுலை உருக வைக்கும் விதமாக கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்த போது எப்படி உணர்ந்தீர்கள்" என்று ராகுலிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

"என் தந்தையைக் கொலை செய்தவர் என்றாலும் பிரபாகரன் மரணித்த போது கவலையடைந்தேன். அவரது உடலைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.

பிரபாகரன் மரணம் குறித்து எனது சகோதரி பிரியங்காவிடமும் கூறினேன்.

அவரும் என்னைப் போலவே வேதனையான மனநிலையில்தான் இருந்தார். மற்றவர்களது துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம்" என்றும் ராகுல் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் அமைப்புதான் காரணம் என்று சொல்லப்பட்டது. சிறையில் தண்டனை பெற்று வரும் நளினியையும் சந்தித்து பிரியங்கா "ஏன் என் தந்தையைக் கொன்றீர்கள்" என்று உருக்கமாகக் கேட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி மனம் உருகி பதில் அளித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.