மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பெற்றோர்களின் வகிபங்கு

பாடசாலையின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் அதாவது ஆசிரியர், மாணவர் தொடர்பு சிறப்பான முறையில் இடம்பெற்றாலும் பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் செல்வாக்கே மாணவர்களின் கல்வியில் முக்கிய இடத்தைப பெறுகின்றது. அந்த வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய தேவைகளை எடுத்து நோக்குவோமானால் மாஸ்லோ எனும் உளவியலாளர் தேவைகளை உடலியல் தேவை, காப்புத் தேவை, அன்புத் தேவை, கணிப்புத் தேவை, சுயதிறனியல் நிறைவுத் தேவை என்ற ஒழுங்கில் கூறுகின்றார். இவ்வாறான தேவைகள் அனைத்தும் ஒரு மாணவனுக்கு பெற்றோரால் போதியளவு வழங்கப்படுமானால் அம் மாணவன் கல்வியில் மிகவும் முன்னேற்றகரமாகச் செயற்படுவான். அதேவேளை மேற்கூறப்பட்ட தேவைகள் போதியளவு நிறைவு செய்யப்படாத மாணவர்கள் தாழ்வுணர்ச்சி, தன்னிழிவு என்பவற்றுக்காளாகி பின்தங்கிய நிலையில் கல்வியில் காணப்படுவார்கள். எனவே பிள்ளைகளுக்கு போதியளவு தேவைகளை நிறைவு செய்து கல்வியில் சிறப்பாகச் செயற்பட ஊக்குவிப்பது பெற்றோரின் கடமையாகும்.

இன்றைய உலக மாற்றத்திற்கேற்ப கல்வியின் அதாவது கலைத்திட்டத்தின் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆரம்பத்தில் 1972ம் ஆண்டு யாப்பு சீர்திருத்தத்துக்கு அமைய 10 வருட காலத்திற்கு ஒரு முறை மாறி வந்த கலைத்திட்டம் இன்றைய காலகட்டத்தில் பல மாற்றங்களை உட்புகுத்தி அடிக்கடி மாறிவருவதினால் மாணவர்களின் கல்வி நிலைமைகளில் போட்டி நிலவி வருகின்றது. அதனடிப்படையில் ஒரு மாணவன் பாடம் சார்ந்த விடயங்களை மட்டும் கற்பதோடு நின்றுவிடாமல் தொழிநுட்பத்திறனையும் வளர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது. ஆதலால் மாணவ சமூகம் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் உழைப்பதோடு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் மீதுள்ள பொறுப்புக்களை வழங்க வேண்டும்

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது பல விடயங்களை பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அத்தோடு தமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டியவை சட்ட பூர்வமானவை என்றும் பாடசாலையும் ஆசிரியர்களும் பதில் கூற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் பல நெருக்கடிகளைப் பெற்றோர்களிடமிருந்து ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்றனர். ஒரு மாணவன் கல்வி கற்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில்; பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. எவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் போதியளவு கவனம், அக்கறை செலுத்துகின்றனர் என்பதை அறிந்து செயற்படும் பொறுப்பு பெற்றோர்களது முக்கிய கடமையாகும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கற்கும் பாடசாலையில் செயற்படும் முறைகளால் தமது பிள்ளைகளின் கல்வியில்  பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது பிள்ளைகள் கல்வியில் கொண்டிருக்கும் ஆர்வம், ஊக்கம் என்பவற்றை அறிதல்,  கலைத்திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாடசாலை சட்ட திட்டங்களை அறிந்து கடைப்பிடித்தல், வகுப்பறை செயற்பாடுகளை அறிந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல், மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டு வேலைகளுக்கு உதவுதல், ஏனைய மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி செயற்பாடுகளை அறிதல், பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உதவுதல் போன்ற பல செயற்பாடுகளில் பெற்றோர்கள் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்களின் உள்ளத்தில் விருத்தி, சிந்தனையாற்றல் என்பன ஏற்பட்டு ஆளுமை அதாவது (pநசளழயெடவைல) விருத்தியடைகின்றது. இதன் மூலம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு மாணவர்கள் விருப்புடன் செயற்பட முன்வருகின்றனர். ஆயினும் சில பெற்றோர்கள் பாடசாலையுடன் தமது தொடர்பை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படலாம் அவ்வாறான பெற்றோர்களை ஆசிரியர்கள் சந்தித்து தகுந்த விழிப்புணர்வை வழங்கி மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களை செயற்பட வைப்பது ஆசிரியரின் கடமையாகும். அத்தோடு பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விடயம் மாணவர்களின் வரவு, இடைவிலகும் மாணவனுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். எனவே தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடனும், விருப்புடனும் பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பு பெற்றோர்களது கடமையாகும்.

பெற்றோர்கள் பிரிந்து வாழ்தல், மறுமணம் செய்தல், தவறான நடத்தைகளில் ஈடுபடல், தாய் தந்தையர் வெளிநாடு செல்லல் என்பவை பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதாவது மேற்கூறப்பட்ட விடயங்களால் குடும்ப அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது பிள்ளைகளுக்கான வாழ்க்கை பயிற்சிகள் கிடைக்காமல் போகும். பெற்றோர்கள் தமது வகிபங்கினை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செய்கின்றார்களோ அதனடிப்படையில் மாணவர்களின் மனப்பாங்குகள், எண்ணக்கருக்கள், ஆற்றல்கள் விருத்தியடைந்து கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படும் என்பதை அறிந்து செயற்பட வேண்டும். மாணவர்களுக்கு சமயம், ஒழுக்கம். சமூக நடத்தை என்பவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது எனவே இன்றே செயற்பட்டு நாளைய தலைவர்களை உருவாக்குவோம்.

ந.கோவேந்தன்
கல்வியியல் சிறப்புக்கற்கை
கிழக்குப்பல்கலைக்கழகம்