எமது ஆட்சியில் ஊழலில் ஈடுபடுவதற்கு அச்சப்படுகின்றனர்: ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை கையேற்றதன் பின்னர் ஊழல் மோசடி, முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு நாட்டில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் மதிப்பீட்டு செயற்திட்டத்தின் பெறுபேறுகளுக்கமைய நடைபெற்ற தேசிய விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் வினைத்திறனான, பலமான அரசசேவை நாட்டில் காணப்பட்டதுடன், பிற்காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக அரச சேவை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது அரசாங்கத்தின் கீழ் சுயாதீனமாக, பக்கச்சார்பற்று செயற்பட அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதுடன், இந்த விருது வழங்கலின் ஊடாக அது மேலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை ஏற்பாடு செய்த சகலருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

அரச சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து திறனுள்ள அரச சேவையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்தகைய விருது விழாக்கள் அரச சேவையை பலப்படுத்துவதில் பாரிய பங்களிப்பினை வழங்குகின்றன என்றும் தெரிவித்தார்.