மட்டக்களப்பில் வழமைக்கு மாறாக கடும் பனிமூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று கடும் பனிமூட்டம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்த பனிமூட்டத்தால் மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதிகள் தெளிவில்லாமல் இருந்துள்ளன.

இதனால் காலை வேளையில் வாகனங்களில் பயணித்தோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்ததோடு, மக்களும் தமது அன்றாட கடமைகளை முன்னெடுக்க முடியாத அளவுக்கு குளிர் காணப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த  பின்னரும் வெகுநேரம் பனிமூட்டம் காணப்பட்டதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அவ்வப்போது பனிமூட்டமும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.