உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு !

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 24 மாநகரசபைகள், 42 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை 341 ஆகும்.
ஏற்கனவே 23 மாநகர சபைகள் , 41 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் என 336 உள்ளுராட்சி சபைகளுக்கும் விகிதாசார ரீதியாக 4,486 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
உள்ளுராட்சி சபைகள் தேர்தல் சட்டத்தில், தெரிவு வட்டாரம் 60 சத வீதம் விகிதாசாரம் 40 சத வீதம் என திருத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,356 அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஏற்கனவே 55 உறுப்பினர்களை கொண்டிருந்த கொழும்பு சபையில் வட்டார ரீதியாக - 66 விகிதாசார ரீதியாக - 44 என உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஆகக் கூடுதலான உறுப்பினர்களை கொண்ட சபையாக கொழும்பு மாநகர சபை விளங்கும்.
அது போன்று 9 உறுப்பினர்களை கொண்டிருந்த ஏறாவூர் நகர சபைக்கு வட்டார ரீதியாக 10 பேரும் விகிதாசார ரீதியாக 6 பேரும் என இனிமேல் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
ஆகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 இலிருந்து 11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டார ரீதியாக 07 பேரும் விகிதாசார ரீதியாக 4 பேரும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
அடுத்த மாதம் 11ம் திகதிக்கும் 20ம் திகதிக்குமிடையிலான குறித்த நாட்களில் வேட்பு மனுக்களை கோரவும் ஜனவரி 20ம் திகதிக்கும் 31ம் திகதிக்குமிடையிலான திகதியொன்றில் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.