அரச செலவில் தனியார் வைத்தியசாலையில் அவசர இருதய சத்திரசிகிச்சைகள்

அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இருதய சத்திரசிகிச்சைகளை அரசாங்கத்தின் செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள இரு இருதய சத்திரசிகிச்சை பிரிவில் புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் குறித்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாதர்ன ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த புனர்நிர்மாண நடவடிக்கை காரணமாக, இருதய சத்திர சிகிச்சைக்கான நோயாளிகள், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்ற போதிலும், அதற்கான உரிய முடிவாக அது அமையாது என்பதால், அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இருதய சத்திரசிகிச்சைகளை அரசாங்க செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ள, அவ்வசதியைக் கொண்ட தனியார் வைத்தியசாலைகளில் குறித்த சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளவும், இருதய சத்திர சிகிச்சை பிரிவின் புனர்நிர்மானப்பணிகளை துரித கதியில் மேற்கொள்வதற்கும் அவசியமான நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.