தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக மருத்துவமனை பொலன்னறுவையில்!

சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு நேற்று  (புதன்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மருத்துவமனை தெற்காசியாவிலேயே விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

 பொலன்னறுவை தள மருத்துவமனையை அண்மித்த 28 ஆம் கட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கான நிதி சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார ஆகியோரும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியென்லியங் உள்ளிட்ட அதிதிகளும்  கலந்துகொண்டனர்.