மாவீரர் தின நினைவேந்தல் செயற்பாடுகளில் நடைபெற்ற முரண்பாடான நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது

திருகோணமலை மாவட்ட சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் செயற்பாடுகளில் நடைபெற்ற முரண்பாடான நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் க. இன்பாராசா.
நேற்றைய தினம் கட்டைப்பறிச்சானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த கார்த்திகை 27ம் திகதி தேசிய மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட்டது. அவ்வகையில் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் துயிலுமில்லத்திற்கு உரித்தான மரியாதைகளுடன் நடைபெறவில்லை என்பதுடன் இந்த மாவீரர் தினத்திற்காக ஆரம்ப கட்டத்தில் எமது ஒன்றியத்தின் சார்பாக கிராம மட்டங்களில் குழுக்களை அமைத்து சிரமதானப் பணிகளிலும், நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தோம்.

இருந்தும் இச்செயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பெயர் குறிப்பட்டுக் கூறக் கூடிய ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழவர் புரட்சிகர முன்னணி ஆகியன இணைந்து மக்களின் ஆதரவு அற்ற நிலையில் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தது மட்டுமின்றி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மாவீரர்களின் துயிலுமில்லத்திற்குரிய கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்கும் வகையில் முரண்பாடாக நடைபெற்றமை கண்டிக்கத்தக்கது.


அத்துடன் எமது ஒன்றியத்தில் இருந்து ஒன்றியத்தின் கொள்கைகளுக்கும், யாப்புக்கும் முரணான விதத்தில் செயற்பட்டு துயிலுமில்லத்தில் அகௌரவ செயற்பாட்டுக்கு ஆதரவளித்து ஒன்றியத்தின் தலைவரின் அனுமதியின்றி கடிதத்தலை இதற்காகப் பயன்படுத்தியமைக்காக எமது கட்சி சார்பில் அவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.