பாராளமன்றம் ஒருநாளைக்கு கூட்டுவதற்காக 50 இலட்சம் ரூபா செலவாகிறது. இது மக்களுக்கே நட்டத்தை ஏற்படுத்தும்

பாராளமன்றத்தில்  மஹிந்த ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 50 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது அணிகள் ஏற்கனவே பேச்சு நடத்தி திட்டமிட்டே இந்த மோதலை அரங்கேற்றியதாக ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை – வலஸ்கல நகரில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நாடாளுமன்றத்தில் மோதிக்கொண்ட இரண்டு அணிகளுமே கடந்தகால மோசடிகளில் ஈடுபட்டவைகளாகும் என்று கூறினார்.

 “நாடாளுமன்றத்தில் இரண்டு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்ட. மத்திய வங்கி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அது ரணில் விக்கிரமசிங்கவை பாதிக்கும் அறிக்கை. அதுமட்டுமல்ல, மத்திய வங்கி 2015ஆம் ஆண்டு மோசடி மட்டுமல்ல, 2008ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான ஊழல் இடம்பெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அது மஹிந்த ராஜபக்சவை பாதிக்கும் விடயமாகும். இன்னும் 34 அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளன.

கோட்டாபயவின் அவன்காட் ஊழல், பசில் ராஜபக்சவின் ஹெலிகொப்டர் பாவனை, சரத் குணரத்னவின் நீர்கொழும்பு மண் விவகாரம், மஹிந்த ராஜபக்சவின் பணம் செலுத்தாத விளம்பரங்கள், அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்பநிகழ்வு செலவு ஆகியன மஹிந்தவின் அணியை பாதிக்கும். எனவே அறிக்கை யாருக்கு பாதிக்காது? அதனையும், இதனையும் இவ்விரு கட்சிகளும் பேசினால் இருதரப்பினருக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் ஏனைய கட்சிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதால் இருதரப்பினரும் பேச்சுநடத்தி மோதலுக்கு வழிசெய்தனர்.

நாடாளுமன்றம் 23ஆம் திகதி கூடப்படவிருந்த நிலையில் அறிக்கை சமர்பிப்பதற்காக அவசரமாக 10ஆம் திகதி கூடியது. எனினும் அறிக்கை சமர்பிக்கப்படவில்லை.
நாடாளுமன்றை ஒருநாளைக்கு கூட்டுவதற்காக 50 இலட்சம் ரூபா செலவாகிறது. இது மக்களுக்கே நட்டத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும். மஹிந்த – ரணில் அணிகளுக்கு இடையிலான மோதல் 50 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சிறுவர்கள் திருடர்களை சித்திரமாக வரையச் சொன்னால், பசில், நிமல் சிறிபாலடி சில்வா, ரவி கருணாநாயக்க, ஆகியோரையே கீறுவார்கள். அரசியல் என்பது திருட்டு விளையாட்டாகிவிட்டது” என்றார்.